நாகை அருகே சாராய ரெய்டுக்கு சென்ற போலீசாரிடம் சாராய வியாபாரிகள் சிலர், போலீசாரின் செல்போன்களை பறித்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அரங்கேறிய கள்ளச்சாராய சாவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சாராய வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாராயம் காய்ச்சுபவர்களை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்திலும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். தொடர்ந்து, தலைமறைவான சாராய வியாபாரிகளை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியிலிருந்து கடத்திவரப்பட்ட கள்ளச்சாராயம், நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆலங்குடி ஊராட்சி ராயபுரம் பகுதியில் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கீழ்வேளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் பிரகாஷ், மாஸ்கோ ஆகிய இருவரும் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
வழக்கம்போல், போலீசாரைப்பார்த்த சாராய சகோதரர்கள் வினோத், சரவணன் ஆகியோர் ‘ஒரு வாரம் கூட ஆகலை. அதுக்குள்ள திரும்பவும் வந்துட்டீங்க’ என்று நக்கலாக கேட்டுள்ளனர்.
அதற்கு போலீசாரோ, ‘இல்லை உங்களை கைது செய்ய வந்திருக்கோம் என்று கூறியவுடன் ஆத்திரமான சாராய சகோதரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் போலீசாரை சுற்றி வளைத்து ‘சும்மா சும்மா கேஸ் போட்டா எப்படி?’ என்று எகிறியதோடு அவர்களின் செல்போனை பறித்து அருகே உள்ள புதரில் மறைத்து வைத்துக் கொண்டுள்ளனர்.
மேலும், ‘நீங்க இங்கேயே இருங்க. உங்க இன்ஸ்பெக்டர் வந்து எங்களுக்கு பதில் சொல்லிட்டு உங்களை அழைச்சிக்கிட்டு போகட்டும்’ என்றபடி அவர்களை சிறைபிடித்து வைத்துக்கொண்டனர்.
இது குறித்த தகவல் கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் ஆகியோருக்கு தெரியவர விரைந்து சென்ற அவர்களையும் சாராய வியாபாரிகள் குடும்பம் சுற்றி வளைத்துக் கொண்டனர்.
பின்னர், ஒருவழியாய் சமாளித்து விழுப்புரம், செங்கல்பட்டு கதையை விவரித்து உத்திரவாதம் அளித்ததன் பேரில், அவர்களை விடுவித்ததோடு புதரில் மறைத்து வைத்திருந்த செல்போன்களை எடுத்துகொடுத்து சாராய சகோதரர்கள் வினோத், சரவணனை அவர்களுடன் அனுப்பி வைத்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசாரிடம் பேசினோம். “நாங்க சாராயமே விற்கலைன்னு சொல்லி தகராறு செய்ததோடு எங்கள் பைக்கில் இருந்த செல்போனை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டனர். பின்னர் உயர் அதிகாரிகள் வந்தவுடன் செல்போனை கொடுத்துவிட்டனர். அவர்களை கைது செய்து சிறைக்கு அனுப்பிவிட்டோம். வேறெது நடக்கவில்லை.” என்றனர்.
- ஆர்.விவேக் ஆனந்தன்