வேதாரண்யம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரு கோடி ரூபாய் ஊழல் செய்த தலைவர், எழுத்தாளர் பதவிகளை நீக்கி அவர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆய்மூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு விவசாய கடன் மற்றும் விவசாய நகை கடன் வழங்குவதில் பல்வேறு மோசடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நகை அடகு வைத்தவர்கள் நகையை மீட்பதற்கு சென்ற போது நகையை தராமல் ’நாளை வாருங்கள், ஒரு வாரம் கழித்து வாருங்கள்’என்று இழுத்தடித்துள்ளனர்.
இதனால், நகையை மீட்க சென்றவர்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து பலரும் அங்கு விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இந்நிலையில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் நகை கடனில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி, விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடத் திரண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினோம். “அடகு வைத்த நகைகளை இவர்கள் எடுத்து வேறு வங்கியில் அடகு வைத்து பெரும் மோசடி செய்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். வேறு வங்கியில் அடகு வைத்துள்ளார்களா? அல்லது விற்பனை செய்து விட்டார்களா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. நாங்கள் அடகு வைத்த நகையை மீட்கச்சென்றால் அப்புறம் வாருங்கள் என்று சொல்கிறார்களே தவிர சரியான பதிலை கூற மறுக்கிறார்கள்”என்றபடி கொதித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வீ.மாரிமுத்து தலைமையில், விவசாயிகள் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வங்கியை முற்றுகையிட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கூட்டுறவு சங்க துணை பதிவாளர் பன்னீர்செல்வம் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ”ஒரு மாத காலத்திற்குள் உரிய ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நகை பத்திரமாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதனைத் தொடந்து கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அறிவழகன் மற்றும் எழுத்தர் இளையராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-ஆர்.விவேக் ஆனந்தன்