நாகை: இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு - காரணம் என்ன?

மருத்துவ காப்பீட்டு தொகை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரியை கைது செய்ய கோர்ட் உத்தரவு
பாலசுப்ரமணியன்
பாலசுப்ரமணியன்

மருத்துவ காப்பீட்டு தொகை வழங்காத இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாலசுப்ரமணியம். இவரது மனைவி மலர்விழியும் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது பெயரில் மாதச் சம்பளத்திலிருந்து ரூ.300 பிடித்தம் செய்யப்பட்டு குடும்ப உறுப்பினர்களுக்கு ரூபாய் 5 இலட்சம் எம்.டி இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 2022ம் வருடம் ஆசிரியை மலர்விழியின் கணவர் பாலசுப்ரமணியத்திற்கு இதய நோய் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சையின் மூலம் இதயத்தில் இருந்த நான்கு அடைப்புகளும் நீக்கப்பட்டது. இதற்கு மொத்தம் ரூ. 6 இலட்சத்து 80 ஆயிரம் மருத்துவச்செலவு ஆகியிருக்கிறது. உடனடியாக ஒரிஜினல் மருத்துவ பில்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதில் ரூ. 2 இலட்சத்து 25,000 பணம் மட்டுமே மருத்துவ செலவுத்தொகையாக இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுத்திருக்கிறது.

மீதமுள்ள தொகையை பலமுறை கேட்டும் மேற்படி இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுக்காமல் தாமதப்படுத்தி இருக்கிறது. ஒரு கட்டத்தில் இனிமேல் பணம் கொடுக்க இயலாது என்றும் கூறியிருக்கிறது. இதனையடுத்து மீதமுள்ள 4 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாயை கேட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் பாலசுப்ரமணியம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் புகார்தாரருக்கு நஷ்டஈடுத்தொகையுடன் சேர்த்து 5 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால், இதனை வழங்குவதற்கான காலக்கெடு முடிந்தும் இன்சூரன்ஸ் நிறுவனம் மேற்படி தொகையை கொடுக்க முன்வரவில்லை.

இதனையடுத்து திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் நாகராஜன் என்பவர் மூலம் தீர்ப்புத்தொகையை பெற காப்பீடு நிறுவனத்தின் மீது நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.

நாகராஜனிடம் வழக்கு குறித்து பேசினோம். “நீதிமன்ற நோட்டீஸ் பெற்றும் காப்பீட்டு நிறுவனம் நஷ்டஈடுத்தொகையை வழங்க முன்வரவில்லை. இந்த ஆவணங்களை பரிசீலித்த நாகை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி தெட்சிணாமூர்த்தி, உறுப்பினர்கள் கமல்நாத் மற்றும் சிவகாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத காப்பீடூ நிறுவன மேலாண்மை இயக்குனரை உடனடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தும்படி சென்னை அண்ணாநகர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.” என்றார்.

-ஆர்.விவேக் ஆனந்தன்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com