நாகை: சீன எஞ்சின் படகுகளுக்கு பதிவுச் சான்று ரத்து - அதிகாரிகள் அதிரடி

ஆய்வின்போது காண்பிக்கப்படாத விசைப்படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து செய்யப்படும்
அதிகாரிகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு

நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட அதிக குதிரைத்திறன் கொண்ட சீன எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகளால் பைபர் படகு மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், சீன எஞ்சின்கள் பொருத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில், கடந்த சில வருடங்களாகவே அரசால் தடை செய்யப்பட்ட அதிக குதிரைத்திறன் கொண்ட சீன எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகில் உரிமையாளர்களும், சிறிய விசைப்படகு மற்றும் பைபர் படகில் மீனவர்களும் சென்றதால் மோதல் சம்பவங்கள் அரங்கேறி பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது.

சீன எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் கடலில் அதிக வேகத்தில் செல்லும்போது அருகே செல்லும் சிறிய பைபர் படகுகள், மற்றும் விசைப்படகுகள் அலைகழிக்கப்பட்டு கவிழ்ந்து விடும் வாய்ப்புகள் ஏற்படுகிறது.

இதனால், அவர்களின் மீன்பிடி வலைகளும் சேதமுற்று மீன் பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது என்பதுதான் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.

இது தொடர்பாக இரு தரப்பு மீனவர்களும் கடலிலேயே மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்ததோடு, சிறிய படகு மீனவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபடத்தொடங்கினர்.

இதனையடுத்து, மீன் வளத்துறை அதிகாரிகள் நாகை மாவட்டத்தில் விசைப்படகுகளை ஆய்வு செய்த போது சீன் எஞ்சின் பொருந்தப்பட்டிருந்தால் அதை பறிமுதல் செய்தனர்.

அப்படியிருந்தும் ஒரு சில சீன எஞ்சினை பொருத்தி மீன் பிடிக்கச் செல்வதாக புகார் எழுந்தது. இதனால், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் தலைமையில் தர்மபுரி உதவி இயக்குனர் கோகுலரமணன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

நாகை துறைமுகம், நாகூர், நம்பியார் நகர், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதிவு பெற்ற விசைப்படகுகளை ஆய்வு செய்தனர். படகு உரிமையாளர் பெயர், படகின் பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், படகு காப்பீட்டு உரிமம், வரி விலக்கு அளிக்கபட்ட டீசல் பாஸ் புத்தகம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அத்துடன் மீனவர் நலத்துறையால் வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு கருவிகள், கடல் பயணத்தின் போது தேவைப்படும் பாதுகாப்பு கருவிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.

இது குறித்து, மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ், “ஆய்வின்போது காண்பிக்கப்படாத விசைப்படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து செய்வதுடன், படகுக்கான பதிவுச்சான்றும் ரத்து செய்யப்படும்.

அதிக குதிரைத்திறன் கொண்ட சீன இஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருந்தாலும் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர்களை எச்சரித்துள்ளோம்.” என்றார்.

- ஆர்.விவேக் ஆனந்தன்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com