மதுரையில் மதிமுக சார்பில் 115வது அண்ணா பிறந்தநாள் மாநாடு மதுரை வலையங்குளத்தில் நடைபெற்றது.
மதுரை மாநாட்டில் வைகோ பேசியதாவது, "தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக உண்ணாவிரதம், மறியல் போராட்டங்களை நடத்தினேன். கருணாநிதி நினைத்ததை நான் பேசுவேன், என என்னிடம் பலமுறை அவரே கூறியுள்ளார். இரண்டு முறை அவருக்கு ஆபத்து வந்தபோது நான் காப்பாற்றினேன், அதையும் மறக்க முடியாது.
கொரானா பாதிப்பு நேரத்தில் உடல் நிலை சரியில்லாமல் மூன்றாண்டுகளாக நான் இருந்தபோது கட்சியினரை என் சார்பில் எனக்கு தெரியாமல் மகன் சந்தித்து வந்தார். பதவிக்காக இதெல்லாம் செய்கிறாரே என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் பதவி ஆசையில் அவர் எதையும் செய்யவில்லை. நான் நினைத்ததை அவரும் சொல்லிவிட்டார்" என்றார்.
வைகோவை தொடர்ந்து அவரது மகன் துரை வைகோ பேசியதாவது, "சாதி ரீதியாக உயர்ந்தவர், தாழ்ந்தவர் என கூறுவது தான் சனாதனம். சனாதன தர்மத்தின்படி நாம் என்னவாக வேண்டும் என சாதி தான் தீர்மானிக்கும். இதை தான் எதிர்க்கிறோம்.
முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், கிறிஸ்டின் மிஷனரிகளால் கூட சனாதனத்தை ஒன்றும் செய்துவிடவில்லை' என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவர் பிறப்பதற்கு முன்பே திராவிடம் மூலம் ஈ.வெ.ரா, அண்ணாதுரை, அம்பேத்கர் ஆகியோரால் சனாதனம் ஒழிக்கப்பட்டது. இது தெரியாமல் பேசுகிறார்.
கட்சி தான் எனக்கு பெரிது. இந்த பதவி தேவையில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர், திருச்சி, சென்னை தொகுதிகளில் போட்டியிடுவேன் என்கின்றனர். எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. ஒரு தொண்டர்களுக்கு தான் வாய்ப்பு அளிக்கப்படும், கட்சியை வலுப்படுத்தவே செயல்படுவேன்" என்றார்.