’எங்களை முறைத்ததால் கொன்றோம்’ என இளைஞரை கொன்ற பேர் வாக்குமூலம் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை பக்கம் கீழ நத்தம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமியின் மகன் ராஜாமணி(வயது30). பஞ்சாயத்து வார்டு உறுப்பினர். ஊரில் பலசரக்குக் கடையும் நடத்தி வந்தார். கடந்த 13ம் தேதி ராஜாமணி ஊரின் அவுட்டரில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஆடுகளை வீட்டுக்கு ஓட்டி வருவதற்காக புறப்பட்டுச் சென்றார். அப்போது அந்த வழியாய் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவரை வழி மறித்து அரிவாளால் வெட்டிக் கொன்றனர்.
ராஜாமணி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சட்டென அம்மக்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் ராஜாமணியைக் கொன்றது மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேர் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசில் பேசினோம், அவர்கள் கூறுகையில், ராஜாமணி கொலை தொடர்பாக கீழநத்தம் மேலூரைச் சேர்ந்த மாயாண்டி 20 வயது, இசக்கி முத்து, 21 வயது, இன்னொரு மாயாண்டி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கொலைக்கான காரணம் என்ன என்று விசாரித்தபோது ராஜாமணி எங்களைப் முறைத்துப் பார்த்தான், அதனால் கொன்றோம் என்று கூலாய் சொல்ல எங்களுக்கு பயங்கர ஷாக்.
அதாவது ராஜாமணி ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார். ஆடுகள் மெயின் ரோட்டில் வழியை மறித்தபடி சென்றிருக்கிறது.கொலையாளிகள் அந்த வழியாய் பைக்கில் சென்றிருக்கிறார்கள், ஆடுகள் ரோட்டில் சென்றதால் பைக்கில் வேகமாய் செல்ல முடியவில்லை, ஆடு வழி விடுவதற்காக ஹாரனை அடித்திருக்கிறார்கள், உடனே ராஜாமணி அவர்களை முறைத்துப் பார்த்திருக்கிறார்.இதனால் டென்சனான மூன்று பேர்களும் பைக்கை விட்டு இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். வாக்குவாதத்தின் முடிவில் மூவரும் சேர்ந்து அரிவாளால் ராஜாமணியை வெட்டிக் கொலை செய்து விட்டு எஸ்கேப்பாகியிருக்கிறார்கள் என்றார்.