முதுமலையில் மரங்களில் அதிகரித்துள்ள தேன்கூடுகள் சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி கூடலூர் முதுமலை புலிகள் காப்பகத்தில் வான் உயர்ந்த மரங்கள், அடர்ந்த வனம் உள்ளது. இந்த முதுமலை வனப்பகுதிகளில் சிறு வன உயிரினங்கள் முதல் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட பெரிய வனவிலங்குகள் வரை வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதுமலை பகுதிக்கும் வந்து இயற்கையை ரசித்து செல்கின்றனர்.
இப்பகுதிகளில் மே, ஜுன் மாதங்களில் துவங்கும் தேனீக்கள் சீசனும் துவங்கியுள்ளது. தேனீக்களின் கூடு கட்டும் திறன் என்பது அறிவியலையே வியக்க வைக்கும் அதிசயம். மரங்கள், பாறைகள், புதர்கள் என பல இடங்களில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளன.
குறிப்பாக கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை கார்குடி பகுதியில் சாலையோரம் உள்ள பழமையான சில ராட்சத மரங்கள் உள்ளன. அம்மரங்கள் முழுவதும் தேன் கூடுகளால் நிறைந்து காட்சியளிக்கிறது. தேன் கூடுகள் அதிகமாக உள்ள மரங்களில் தேன் வாசனையும் மூக்கை துளைக்கிறது. இது பார்ப்போரை ’என்ன இது இயற்கையின் விந்தை’ என வியக்க வைக்கிறது.
இந்நிலையில் அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தேன் கூடுகள் அதிகமாக உள்ள மரங்களை கண்டு வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர். மேலும் ’தேன் கூடுகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது. மீறினால், தேனீக்கள் தாக்ககூடும்’ எனவும் சுற்றுலா பயணிகள் அவ்வபோது எச்சரிக்கப்படுகின்றனர்.