நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் அரசியல் பிரமுகர் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி, கந்தசாரப்பட்டி பகுதி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக சென்றார்.
அதையடுத்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோதிமணியை பார்த்த அப்பகுதி மக்கள், "தேர்தல் நேரம் வரும் போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா? வாக்கு கேட்க மட்டுமே வருகின்றீர்கள், அதன் பின்னர் இந்த பகுதியில் உங்களை பார்க்கவே இல்லை, குறிப்பாக நன்றி சொல்ல கூட வரவில்லை" என்று காட்டமாக கேள்வி கேட்டிருக்கின்றனர்.
உடனே எம்.பி ஜோதிமணி, "தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் நன்றி தெரிவித்து கொண்டு தான் வந்துள்ளேன், நீங்கள் தேவையில்லாமல் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வந்தது போல் தெரிகிறது" என ஆவேசமாக பேசினார் ஜோதிமணி. பதில் சொல்ல முடியாமல் திணறிய ஜோதிமணி அங்கிருந்து வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்கள் வைரலாகின.
இதையடுத்து ஜோதிமணி தானே பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் "பா.ஜ.க திட்டமிட்டு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து இதை செய்கிறார்கள்" என்று பா.ஜ.க மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.
இந்நிலையில், ஜோதிமணி வெளியிட்ட வீடியோவிற்கு பதில் அளித்த கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில் நாதன், "செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் கரூருக்குள் தலை காட்டுகிறார் ஜோதிமணி. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பா.ஜ.க மீது புகார் சொல்கிறார். "வாய்சவடால் ஜோதிமணியை" பல கேள்விகள் கேட்க கரூர் தொகுதி மக்கள் தயாராக இருக்கிறார்கள்" என்று ஜோதிமணி புகாருக்கு விளக்கம் கொடுத்தார் செந்தில் நாதன்.