சிதம்பரம்: ‘அரசு மருத்துவமனை டாக்டர்களால் மனஉளைச்சல்’ - குழந்தையை பறிகொடுத்த தாய் கதறல்

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களின் அலட்சியப்போக்கு காரணமாக ஆண் குழந்தை இறந்துவிட்டதாக தாய் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். மேலும் டாக்டர்கள் தன்னை ஏளனம் செய்ததாகவும் அவர், கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
குழந்தையை பறிகொடுத்த தாய்
குழந்தையை பறிகொடுத்த தாய்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரிய நற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி புவனேஸ்வரி. தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் புவனேஸ்வரி நிறைமாத கர்ப்பிணி ஆனார்.

இதையடுத்து முதல் பிரசவத்திற்காக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு முறையான சிகிச்சை பெற முடியாததால் அங்கிருந்து சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை புவனேஸ்வரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட வந்த நிலையில் வயிற்றுவலி ஏற்பட்டு உள்ளதாக டாக்டர்களிடம் தெரிவித்து உள்ளார்.

மேலும் பனிக்குடம் உடைந்திருக்கும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் புவனேஸ்வரி பலமுறை கூறியுள்ளார். அதற்கு அவர்கள், ‘நீ டாக்டரா? நாங்க டாக்டரா?’ எனக் கேட்டு அலட்சியப் போக்கை கடைபிடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் குழந்தை சுகப்பிரசவத்தில்தான் பிறக்கும் என உறுதியளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் அதிக வலி ஏற்படவே அவசரம் அவசரமாக மருத்துவர்கள் குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர்.

அப்போதுதான் புவனேஸ்வரி கூறியதுபோலவே பனிக்குடம் உடைந்து இருந்ததும், இதனால் தண்ணீர் குடித்து ஆண் குழந்தை இறந்த நிலையில் இருந்ததும், டாக்டர்களுக்கு தெரியவந்துள்ளது.

உடனே புவனேஸ்வரி டாக்டர்களிடம் முறையிட்டதற்கு, ‘உனக்கு என்ன தெரியும்? வாயை மூடு’ என கேட்டுவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ள நிலையில் டாக்டர் பேசிய பேச்சு, புவனேஸ்வரி மட்டுமல்லாமல் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டதற்கு, ‘யார் சிகிச்சை அளித்தார்களோ அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்’ எனக் கூறி நைசாக கழன்றுகொண்டுள்ளனர்.

சுகப்பிரசவத்தை நம்பி ஆசையோடு கர்ப்பிணியிடம் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டதால் குழந்தை இறந்து பிறந்ததாக கூறப்படும் சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி கூறுகையில், ‘பலமுறை மருத்துவர்களிடம் வயிற்றுவலி அதிகமாக உள்ளது. பனிக்குடம் உடைந்திருக்கும் என தெரிவித்தேன். ஆனால் என்னை ஏளனமாக பேசி அலட்சியப் போக்குடன் டாக்டர்கள் நடந்துகொண்டனர்.

இதனால்தான் எனது குழந்தை இறந்து பிறந்துள்ளது. சுகப்பிரசவத்துடன் குழந்தை பிறக்கும் என ஆசையாக இருந்த நான், மருத்துவர்களின் அலட்சியப்போக்கால் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.

இதுபோன்று மற்ற பெண்களுக்கு நடைபெறாமல் இருக்க மருத்துவர்கள், செவிலியர்கள் வரும் பெண்களின் உடல் நிலையை கேட்டறிந்து தீவிரமாக பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்’ என, கண்ணீர்மல்க கூறினார்.

- பொய்யாமொழி, சிதம்பரம்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com