திருவண்ணாமலை அடுத்த சாவல்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவரது மனைவி ராஜலட்சுமி (32). நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக, குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜலட்சுமியின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது.
பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் ரத்தம் செலுத்த வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். எனவே உறவினர்கள் உதவியுடன் ராஜலட்சுமிக்கு ரத்தம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ராஜலட்சுமி இன்று உயிரிழந்துள்ளார்.
இதனால் ஆத்திரமும், அதிர்ச்சியும் அடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ‘டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தாய், சேய் உயிரிழந்துவிட்டனர்.
தவறான சிகிச்சை அளித்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்து காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ‘பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதை ஏற்க மறுத்த உறவினர்கள் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை என்பது டாக்டருக்கு சாதகமாக இருக்கும்’ என குற்றம்சாட்டினர். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.