தரை தட்டிய இழுவைக் கப்பலை மீட்க முடியாதது ஏன்?

ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்டது இன்னும் தரை தட்டிய இழுவை கப்பலை மீட்காதது ஏன் என்று கேள்விகள் எழும்புகிறது.
தரை தட்டிய இழுவை கப்பல்
தரை தட்டிய இழுவை கப்பல்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6வது அணு உலைகள் கட்டுமான பணிகள் துரிதமாய் நடைபெற்று வருகின்றன. சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாயில் இப்பணிகள் முடக்கி விடப்பட்டிருக்கின்றன. வரும் 2027ம் ஆண்டு புதிய அணு உலைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் ரஷ்ய - உக்ரேன் போரால் ரஷ்யாவிலிருந்து உபகரணங்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் பணிகள் முடிய 2030ம் ஆண்டு ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து கப்பல் மூலம் தலா 300 டன் எடை உடைய நீராவி ஜெனரேட்டர்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் வந்து இறங்கின. பின்னர் அவை மிதவை கப்பல் மூலம் கூடங்குளம் அணு உலைக்கு கொண்டு வரப்பட்டன. முதல் இரண்டு நீராவி ஜெனரேட்டர்கள் அணு உலைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படவில்லை.

பாறை தட்டி நின்றுவிட்ட இழுவை கப்பல்
பாறை தட்டி நின்றுவிட்ட இழுவை கப்பல்

அடுத்ததாய் இரண்டு நீராவி ஜெனரேட்டர்களை கொண்டு செல்லும் போது அணு உலையில் உள்ள சிறிய துறைமுகத்தில் மிதவைக் கப்பல் நுழையும் போது, பாறை தட்டி நின்று விட்டது. சொல்லப்போனால் பாறையில் இழுவைக் கப்பல் சிக்கிக் கொண்டு விட்டது. கடந்த 7ம் தேதி தரை தட்டிய மிதவைக் கப்பலை இன்று வரை மீட்க முடியவில்லை.

இது குறித்து கூடங்குளம் பொறியாளர் சுரேஷ் கூறுகையில், "மிதவைக் கப்பலின் அடியில் உள்ள உலோக கயிறு அறுந்து போய் விட்டது. இதை சீரமைப்பதில் தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தண்ணீருக்குள் சென்று உலோக கயிற்றை பத்த வைக்க வேண்டும். எனவே, சென்னை, மும்பையில் இருந்து பொறியாளர்கள் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். இலங்கையிலிருந்து சக்தி வாய்ந்த ஒரியன் மிதவைக் கப்பலும் வந்திருக்கிறது. விரைவில் மிதவைக் கப்பல் மீட்கப்படும், இதனால் நீராவி ஜெனரேட்டர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com