தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவலில், ”கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 300க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் தொடங்கி 13 நாட்களில் தமிழ்நாட்டில் மொத்தம் 204 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இனி வரும் 3 மாதங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடர் காய்ச்சல், தலைவலி, உடல்வலி இருப்பின் சற்றும் யோசிக்காமல் ரத்தப்பரிசோதனை செய்து டெங்கு பாதிப்பு உள்ளதா?எனத் தெரிந்துக்கொள்வது அவசியம்.
மேலும், டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு முன்பே ஏடிஎஸ் கொசுப் புழுக்களை அழிக்க மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.டெங்கு பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.