நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் அருகே உள்ள புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மனைவி மல்லிகா[60]. இவர்களுக்குத் தங்க பிரகாஷ், மகேஷ் என இரு மகன்கள் உள்ளனர். மல்லிகாவின் மூத்த மகன் தங்கபிரகாஷ் அவருடைய வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 2014ம் வருடம் அம்பத்தூர், கலைவாணர் நகரில் வசிக்கும் மற்றொரு மகன் மகேஷ் வீட்டிற்குச் செல்வதாக நாகையிலிருந்து புறப்பட்டுச் சென்ற மல்லிகா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. மகேஷ் வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ் அம்பத்தூர் எஸ்டேட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மல்லிகாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரிலிருந்து நாகை மாவட்ட எஸ்.பி ஹர்ஷ் சிங்கை தொடர்பு கொண்டு பேசிய ஒருவர், ’புனேயில் உள்ள ஆசிரமத்தில் மூதாட்டி ஒருவர் இருக்கிறார். அவர் நாகையிலிருந்து சென்னை வரும் போது வழி தவறி 9 வருடங்களுக்கு முன்பு புனே வந்ததாகக் கூறுகிறார்.” என்றவர் மூதாட்டியின் முகவரியையும் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து எஸ்.பி ஹர்ஷ் சிங் தனிப்படையை அமைத்து விசாரித்ததில் 9 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மல்லிகா என்பது தெரியவந்துள்ளது. உடனே அவர் புனேயிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் தன்னுடைய குடும்பத்தினரைச் சந்தித்துக் கட்டி அணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
இது தொடர்பாக மூதாட்டி மல்லிகாவிடம் பேசினோம். “நாகையிலிருந்து மகன் மகேஷ் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றேன். சென்னையிலிருந்து அம்பத்தூர் செல்ல லோக்கல் ரயிலில் ஏறுவதற்கு பதிலாக புனே செல்லும் ரயிலில் ஏறிவிட்டேன். நான் செல்போனும் பயன்படுத்துவதில்லை. மகன்களின் செல்போன் எண்ணும் எனக்கு நினைவில் இல்லை. மொழி தெரியாமல் பல இடங்களில் சுற்றித்திரிந்த நான் 3 வருடங்களுக்கு முன்பு புனேயில் உள்ள ஆசிரமத்தில் சேர்ந்தேன். அப்போது கடவுள் போல் தமிழகத்தைச்சேர்ந்த ஐ.டி கம்பெனிகளில் பணியாற்றும் இளைஞர்கள் அங்கு அன்னதானம் செய்ய வந்தனர். அவர்களிடம் நான் வழி தவறிய விபரத்தை கூறி அழுதேன். உடனே அவர்கள் நாகை போலீசை தொடர்பு கொண்டு பேச போலீசார் எடுத்த நடவடிக்கையால் மீண்டும் குடும்பத்தினரிடம் சேர்ந்தேன். எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி.” என்றார் கண்ணீர் மல்க.
பின்னர் நாகை எஸ்.பி ஹர்ஷ் சிங், மூதாட்டி மல்லிகாவிற்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். மல்லிகாவின் மகன்களான தங்கபிரகாஷ், மகேஷ் குடும்பத்தினர் போலீசாருக்கும், ஐ.டி இளைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இது தொடர்பாகப் பேசிய எஸ்.பி ஹர்ஷ்சிங், “உங்கள் எஸ்.பியிடம் பேசுங்கள்’ என்ற ஒரு திட்டத்தைச் செயல்படுத்திவருவதோடு அதற்காக 8428103040 என்ற செல்போன் எண்ணையும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்த எண் மூலமாக யார் வேண்டுமானாலும் எஸ்.பியிடம் நேரடியாகப் பேசி தங்கள் பிரச்னைகளை கூறலாம். இந்த எண் மூலம்தான் ஐ.டி யில் பணியாற்றும் இளைஞர்கள் தொடர்பு கொண்டு மூதாட்டி குறித்து தகவல் கூறியிருக்கின்றனர்" என்றார்.
-ஆர்.விவேக் ஆனந்தன்.