தந்தையின் பெயரை வலியுறுத்தாமல் மைனர் பெண்ணின் கருவை கலைக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் குற்றங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் வழக்கமான ஆணுறுப்பு பரிதோதனை மேற்கொள்ளப்பட வேண்டியதில்லை.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

18 வயதுக்கு குறைவான மைனர் பெண்ணுக்கு ஏற்படும் கருவை கலைக்க தந்தையின் பெயரை மருத்துவ அறிக்கையில் வலியுறுத்தாமல் கலைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மைனர்கள் தங்களுக்கு இடையே சம்மதத்துடன் உடலுறவு கொள்வது, கருக்கலைப்புகள் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 18 வயதுக்கு குறைவான மைனர் பெண்ணுக்கு மைனர் தந்தையின் பெயரை மருத்துவ அறிக்கையில் வலியுறுத்தாமல் கர்ப்பத்தை கலைக்கலாம் என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் நீதிபதிகள், மைனர் பெண் அல்லது அவரது பாதுகாவலர் சட்டப்பூர்வமாக வழக்கை தொடர ஆர்வம் காட்டவில்லை என்றாலும், குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

கர்ப்பத்திற்கு காரணமான மைனர், தந்தையின் பெயரை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினால், பயத்தின் காரணமாக தகுதியான மருத்துவர்களை அணுகும் வாய்ப்பு குறைந்து, தகுதியில்லாத மருத்துவர்களை அணுக வாய்ப்புள்ளது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அப்படியே ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கற்பழிப்புக்கு ஆளான மைனர் பெண்ணுக்கு இரண்டு விரல் பரிசோதனை மற்றும் யோனி பரிசோதனை ஆகிய இரண்டும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் தெளிவுபடுத்தியது.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கருப்பைக் கட்டியில் ஏதேனும் காயம் உள்ளதா? என்பதை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், அதை ஒரு கருவி மூலம் மட்டுமே செய்ய வேண்டும். காயங்களைக் கண்டறிவதற்கோ? அல்லது மருத்துவ சிகிச்சைக்காகவோ? அவசியம் ஏற்படாவிட்டால், அத்தகைய பரிசோதனையை மேற்கொள்ளக்கூடாது என்ற தேசிய சுகாதாரம் வெளியிட்டுள்ள அறிக்கைபடி செயல்பட வேண்டும்.

பாலியல் குற்றங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் வழக்கமான ஆணுறுப்பு பரிதோதனை மேற்கொள்ளப்பட வேண்டியதில்லை. குற்றம் சாட்டப்பட்ட மைனர் ஆண், கற்பழிப்பு வழக்கில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள ஆண்மைக்குறைவை உள்ளதாக கூறினால், அவர் ஆண்மைக்குறைவு உள்ளவர் என்பதை குற்றம் சாட்டப்பட்ட அவரே நிரூபிக்க வேண்டும்.

கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்படும் நபரின் ஆணுறுப்பு பரிசோதனைகள், சாதாரண மருத்துவ பரிதோதனைகளுடன எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்பதை தெளிவுபடுத்துவதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com