குழந்தையின் கை அகற்றம்: ‘மருத்துவமனையில் நடந்தது என்ன?’ - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் ‘மருத்துவமனையில் நடந்தது என்ன?’ என்பது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
குழந்தைக்கு தீவிர சிகிச்சை
குழந்தைக்கு தீவிர சிகிச்சை

ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது மகீர் என்கிற ஒன்றரை வயது குழந்தை குறை பிரசவத்தில் 1.5 கிலோ எடையுடன் பிறந்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கையில் டிரிப்ஸ் ஏற்றப்பட்டுள்ளது.

அப்போது செவிலியர்கள் அலட்சியமாக ஊசி போட்டதால் குழந்தையின் கை அழுகியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குழந்தைக்கு மயக்க மருந்து எனப்படுகிற அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2 மணிநேரம் அறுவை சிகிச்சையில் குழந்தையின் அழுகிய கை அகற்றப்பட்டது.

இந்த நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக புகார் எழுந்துள்ளது.

குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து மருத்துவ அலுவலரிடம் விசாரித்தேன். ஏற்கனவே குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்துள்ளது.

இதனால் பல்வேறு பிரச்னைகள் இருந்துள்ளன. கையில் ஊசி செலுத்தியது குறித்து இன்று விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். டாக்டர்களாக இருக்கட்டும் அல்லது செவிலியர்களாக இருக்கட்டும்.

அவர்கள் யாருமே பாதிப்பு ஏற்படுத்த மருத்துவமனைக்கு வருவதில்லை. பாதுகாக்கத்தான் வருகிறார்கள். நிச்சயம் உண்மைத்தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சிகிச்சையின்போது கவனக்குறைவு இருந்ததா? என்று கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக, ‘பொதுமருத்துவத்துறை உள்பட 3 மருத்துவர்கள் கொண்ட விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தைக்கு தலையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளன. சிகிச்சையின்போது கவனக்குறைவு ஏற்பட்டு உள்ளதா? என்பதை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது’ என மருத்துவமனை டீன் தெரிவித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com