மதுரை: பொது இடங்களில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

மதுரையில் பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ‘மதுரை மாவட்டத்தில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வினைப் பொறுத்தவரை 10 முதல் 15 லட்சம் வரை மக்கள் கூட்டம் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

இதில் மதுரை மாநகர சுகாதார அலுவலர், மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏராளமானோர் பங்கேற்கும் இந்த விழாவில் எந்தவிதமான தொற்று நோய் பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

திருவிழா நடக்கும் பகுதிகளில் சுமார் 1580 மாநகர பணியாளர்கள் மற்றும் 160 சிறப்புப் பணியாளர்கள் மற்றும் அயல் நகராட்சி பணியாளர்கள் 1800 பேர் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். 22 துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் தூய்மை பணிகளை மேற்பார்வையிட உள்ளனர்.

அத்துடன் மதுரைக்கு வரும் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உறுதி செய்யும் பொருட்டு 23 சிறப்புக் குழுக்கள் அமைத்து குடிநீரில் குளோரின் அளவு சரிபார்க்கப்படும் பணியினை உறுதி செய்ய இருக்கிறார்கள்.

பக்தர்களுக்கு உடல் நலக்குறைப்பாடு ஏற்பட்டால் மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கு மாநகராட்சி பொதுச் சுகாதாரத்துறை 56 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்க இருக்கிறது. 168 மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.

கடந்தாண்டு 20 முகாம்களே நடைபெற்றது. தற்போது 56 இடங்களில் முகாம்கள் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆங்காங்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தயார் நிலையில் 32 இடங்களில் ஆம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப்பட உள்ளது.

திருவிழாவின் போது மண்டகப்படிகளில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குபவர்கள் இணையதளத்தில் மூலம் விண்ணப்பங்கள் பெற்று மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் அனுமதி பெற்று மட்டுமே உணவகங்கள், குளிர்பான கடைகள் இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக புகார்கள் ஏதும் இருந்தால் தெரிவிக்க ஒரு வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உணவுப் பொருட்கள் குளிர்பானங்களில் புகார்கள் இருந்தால் பொதுமக்கள் நேரடியாக 9444042322 என்கிற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுசம்பந்தமாக ஆங்காங்கே விளம்பரப் பலகைகள் வைக்க அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும், சித்திரைத் திருவிழாவில் எந்தவித நோய்த்தொற்று அபாயமும், சுகாதார சீர்கேடும் இல்லாமல் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்கிற வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

கொரோனா தற்போது இல்லை. எஸ்பிபி1.16 என்கிற வைரஸ் இந்த இரண்டு மாதங்களாகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பு தொடங்கியதில் இருந்து நாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் இந்த வைரஸை பொறுத்தவரை வீரியம் குறைவாக உள்ளது. பாதிப்பு ஏற்பட்டவர்கள் நான்கைந்து நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் ஆலோசனை பெற்று நடந்து கொண்டால் சரியாகிவிடும்.

மதுரையில் மருத்துவ கழிவுகள் வெளியில் கொட்டப்படுவது தொடர்பாக நேற்றுகூட ஒரு மருத்துவமனை மீது நடவடிக்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை மருத்துவ கழிவுகளை முறையாகக் கையாள வேண்டும்.

இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். இதை ஒரு எச்சரிக்கையாகத் தனியார் மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுகளைக் கையாள்வது முறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

மருத்துவ கழிவுகள் மூலம் ஏற்படும் பாதிப்பு அவர்களுக்கும் தெரியும். தெரிந்தே பொது இடங்களில் இதைக் கொட்டி பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்படி எந்த நிறுவனம் நடந்து கொண்டாலும் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

- சுரேகா எழில்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com