சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புகரனேந்தலில் தமிழக முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் தா.கிருஷ்ணன் 20ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் உள்ள சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘முன்னர் 500, 1000 ரூபாய் செல்லாது என திடீரென அறிவித்ததைப்போல் இல்லாமல் இந்த முறை 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்பதை முன்னதாக தெரிவித்த ஒன்றிய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் நன்றி.
இந்த கால அவகாசத்தை உரியவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளைப்போல கர்நாடகாவிலும் கொடுக்கப்பட்டிருப்பது நிதர்சனமான உண்மை.
தமிழகத்தில் இலவசங்கள் கூடாது என விமர்சனம் செய்த பா.ஜ.க-வினர் பிற மாநிலங்களில் இலவசத் திட்டங்களை அறிவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். படிப்பது ராமாயணம்.. இடிப்பது பெருமாள் கோயில் என்பதைப்போல உபதேசங்களை பிறருக்கு சொல்லும் பா.ஜ.க-வினர் அதனை கடைபிடிப்பது இல்லை’ என்றார்.