சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 365 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
அப்போது அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசும்போது, ‘தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் 80 சதவிகிதம் நிறைவேற்றியது மட்டுமன்றி, புதிதாகவும் பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்வர் அறிவித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.
தமிழகத்தில் ரூ.513 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்தது, மொத்தம் 1608614 விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி மதிப்பிலான விவசாய கடனை தள்ளுபடி செய்தது உள்பட ஒவ்வொரு துறையிலும் எண்ணற்ற திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பாக முதல்வர் செயல்படுத்தி உள்ளார்.
தமிழகத்தினை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தி வருகிறார். கூட்டுறவு வங்கிகளில் QR கோடு மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் திட்டம் காஞ்சிபுரத்தில் துவக்கப்பட்டது. ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி தமிழகம் முழுவதும் இணைய வாயிலாக பணப் பரிவர்த்தனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முன்னோர் காலம் தொட்டு சிறுதானியங்கள் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் நாகரிகம் கருதி அது கைவிடப்பட்டு சிறுதானிய விவசாயமும் குறைந்து போனது. அதை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் குறைந்து போனது.
மருத்துவர்கள் ஆலோசனையின்படி தற்பொழுது மீண்டும் மக்கள் சிறுதானியங்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். அந்த அடிப்படையில் சிறுதானியங்களுக்கான ஆண்டாக தமிழக அரசு, மத்திய அரசு, ஐ.நா சபை இந்த ஆண்டை சிறு தானிய ஆண்டாக அறிவித்துள்ளன.
தமிழகத்தில் சிறுதானியங்களை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் முதல் கட்டமாக 2 மாவட்டங்களில் சிறுதானியங்கள் (கேழ்வரகு ) குடும்ப அட்டைகளுக்கு 2 கிலோ வீதம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு உடனடியாக வழங்குவதற்கு தேவையான சிறு தானியங்கள் மொத்தமாக கிடைக்க வாய்ப்பில்லை. பயிர் செய்பவர்களும் குறைந்துபோனதால் பிற மாநிலங்களில் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த திட்டங்களை அறிவிப்பது பெரிதல்ல. அந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காகத்தான் நீலகிரி, தர்மபுரி ஆகிய 2 மாவட்டங்களில் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.