அமைச்சர் கே.என்.நேரு மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் கடந்த 2009-ல் கட்டப்பட்ட 'கலைஞர் அறிவாலயம்' கட்டடத்துக்கான நிலம் தன்னிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும், பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்துக்கு மிகக்குறைந்த விலையே தரப்பட்டதாகவும் சீனிவாசன் என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.
சீனிவாசன் புகார் தொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் கே.என்.நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் நேரு தரப்பில், இந்த வழக்கில் நில உரிமையாளருடன் சமரசமாக சென்று விட்டதால் திருச்சியில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், புகார்தாரர் சீனிவாசன் தரப்பிலும் சமரச மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் நேரு மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.