மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் 1348வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘ ஜூன் 1ம் தேதி 6 முதல் 12 வகுப்பு வரையிலும், அதேபோன்று 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும் உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி முதல் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும்.
பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருந்தால் முதல்வர் அதனை அறிவிப்பார். தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். முறையான சோதனைகளுக்குப் பிறகே பள்ளி பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படும்.
திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தை திறந்துவைக்க பல்வேறு தரப்பில் கோரிக்கை வந்துள்ளது. இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் மணி மண்டபத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவ, மாணவிகளிடம் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு வழக்கம்போல சைக்கிள், லேப்டாப் வழங்கப்படும்.
பள்ளி திறப்பு அன்றே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். அதற்கு தேவையான பாடப் புத்தகங்கள் கையிருப்பில் உள்ளது. பழுதடைந்த கட்டடங்களை புதுப்பிக்கும் திட்டத்தினை கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி வேலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதில் 185 ஊராட்சிகளில் உள்ள தொடக்கப் பள்ளி கட்டிடங்கள் புதுப்பிக்கப்படும். உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் கட்டுவதற்கு நபார்டு வங்கி உதவி தேவைப்படுகிறது.
நபார்டு வங்கி ஒட்டுமொத்த அமைச்சர்களின் துறைகளுக்கு நிதி உதவி வழங்குகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறைக்கும் நிதி உதவி வழங்கப்படும். விரைவில் நிதியை பெற்று ஒரு மாத காலத்திற்குள் பள்ளிகள் புதுப்பிக்கும் பணி துவங்கும்’ என்றார்.