அச்சுறுத்தும் புளியமரம்: அங்கன்வாடிக்கு ஆபத்து- பதறும் பொதுமக்கள்

அச்சுறுத்தும் புளியமரம்: அங்கன்வாடிக்கு ஆபத்து- பதறும் பொதுமக்கள்
அச்சுறுத்தும் புளியமரம்
அச்சுறுத்தும் புளியமரம்

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே அங்கன்வாடி மையம் அருகில் விரிசல் விட்ட நிலையில், ஆபத்தான நிலையில் புளியமரம் இருப்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வெட்டி அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த புளியமரம் ஒரு பகுதி முழுவதுமாக, கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது. இந்நிலையில் மீதம் இரண்டு கிளைகள் மட்டுமே இருந்து வருகிறது. இந்த இரண்டு கிளைகளும் அங்கன்வாடி மைய மேற்கூறையின் மீது சாய்ந்த நிலையில் இருந்து வருகிறது. இதில் ஒரு கிளை விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அதிக அளவில் காற்று வீசுகின்ற பொழுது கிளை முறிந்து கீழே விழுகின்ற நிலை இருந்து வருகிறது. அவ்வாறு கிளை விழுந்தால் அங்கன்வாடி மையம் மீது விழுந்து விடும்.

இந்நிலையில் அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அன்றாடம் வந்து செல்வதால், புளியமரம் கீழே விழுகின்ற பொழுது அங்கன்வாடி மையத்தில் இருப்பவர்களுக்கு, பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனை வெட்டி அகற்றுவதற்கு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடி மையம் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள புளியமரத்தினை வெட்டி அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகரனிடம் கேட்டபோது, ’’கொளகம்பட்டி நடுநிலைப் பள்ளியில் உள்ள புளியமரம் குறித்த புகார் எனது பார்வைக்கு வந்தது. இதனை நேரில் ஆய்வு செய்து, இதனை வெட்டி அகற்றுவதற்கு அனுமதி கேட்டு, மாவட்ட ஆட்சியருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த புளியமரம் வெட்டி அகற்றப்படும்’’எனத் தெரிவித்தார்.

-பொய்கை .கோ. கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com