தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்றக் கோரிக்கை வைத்து ம.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பஸ் நிறுத்தம் அருகில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பஸ் நிலையத்தை மறைத்து பேனர் வைக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் அந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இது குறித்து ஸ்ரீவைகுண்டம் நகர பா.ஜ.க நிர்வாகிகள், பேருந்து நிலையத்தை மறைத்து பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆகியோருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் நகர பா.ஜ.கவினரிடம் பேசியபோது, "ஸ்ரீவைகுண்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் டிஜிட்டல் பிளக்ஸ் பேனர் வைத்து மறைத்து இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
இப்போது கடுமையான கோடை காலம். உச்சி வெயில் மண்டையை பிளக்கிறது. ஆனால், மக்கள் பயன்பாட்டிற்காக உள்ள பேருந்து நிலையத்தை பேனர் வைத்து மறைத்து இருக்கிறார்கள் ம.தி.மு.கவினர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடத்தப்படும் தெருமுனை பிரச்சாரங்களில் சாலையின் ஓரத்தில் கொடி கட்டுவதற்கு கூட காவல்துறை அனுமதி அளிப்பதில்லை.
ஆனால், இதற்கு காவல்துறை எப்படி அனுமதி அளித்தது. அதுவும் மாநில கவர்னர் அவர்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம் போராட்டத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்படும்" என எச்சரிக்கை விடுத்தனர்.