ஒரு தலை ராகம் படம் எடுத்த மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு டி.ராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரபல திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் லட்சிய தி.மு.கவின் தலைவரான டி.ராஜேந்தர் தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு வருகை தந்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர் தனது குல தெய்வமான மயிலாடுதுறையில் உள்ள சியாமளாதேவி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாட்டில் கலந்து கொண்டார்.
பின்னர் நேற்று சென்னை செல்வதற்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்தவர் ரயில் பயணிகளிடம் சகஜமாக பேசி அவர்கள் விருப்பப்படி செல்பி எடுக்கவும் சம்மதித்தார். குழந்தைகளை கையில் வாங்கி முத்தமிட்டு கொஞ்சினார்.
அப்போது டி.ராஜேந்தர், “தேசத்தின் மீது கொண்ட பற்றால் வந்தேமாதரம் என்ற பாடலை தமிழிலும், இந்தியிலும் நான் பாடியது அனைவரது மனதிலும் பதிந்திருக்கிறது. இதற்கு காரணம் என்னை உருவாக்கிய இந்த மயிலாடுதுறை மண் தான். எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு எனது மகனின் அன்பினால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று இன்று மறுபிறவி எடுத்து வந்துள்ளேன். இப்போதும் எனக்கு புத்துணர்ச்சி அளிப்பது இந்த மயிலாடுதுறை மண் தான்.
மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி செல்லும் ரயிலில் ஏறிச்சென்று மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் நான் படித்தேன். அதேபோல், எனக்குப்பிடித்த அந்த ரயிலில்தான் எனது ஒரு தலை ராகம் படத்தையும் எடுத்தேன். அந்த படம் என்னை அடையாளம் காட்டியதோடு, மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.
ஆனால், அந்த தரங்கம்பாடி ரயில் இன்றைக்கு இல்லை. அந்த ரயில் ஓடிய பாதை தடம் மட்டுமே உள்ளது. ஏழை, எளிய மக்கள், மற்றும் மீனவ மக்கள் என அனைவரும் பயன்படுத்திய அந்த ரயிலை மீண்டும் கொண்டுவரவேண்டுமென்று இந்த மயிலாடுதுறை மண்ணிலிருந்து மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.” என்றார். அப்போது, அருகில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் உடன் இருந்தனர்.
- ஆர்.விவேக் ஆனந்தன்