மயிலாடுதுறை: ராமாமிர்தம் அம்மையார் சிலை திறப்பு விழாவில் ஒன்றியக்குழு தலைவிக்கு அவமரியாதை?- தி.மு.க-வினர் கொதிப்பு

மயிலாடுதுறை அருகே ராமாமிர்தம் அம்மையார் சிலை திறப்பு விழாவில் ஒன்றியக்குழு தலைவி அவமரியாதையாக நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தி.மு.க-வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமாமிர்தம் அம்மையார் சிலை மரியாதை செலுத்திய அமைச்சர் மெய்யநாதன்
ராமாமிர்தம் அம்மையார் சிலை மரியாதை செலுத்திய அமைச்சர் மெய்யநாதன்

சமூக சீர்திருத்த பெண் போராளி ராமாமிர்தம் அம்மையார் சிலை திறப்பு விழாவில் உட்கட்சி பூசலால் ஒன்றியக்குழு தலைவிக்கு அவமரியாதை நேர்ந்துள்ளதாக தி.மு.க-வினர் கொதித்துள்ளனர்.

மயிலாடுதுறை வரதாச்சாரியார் பூங்காவில் பெண் சமூக சீர்திருத்த போராளி ராமாமிர்தம் அம்மையார் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சிலையை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, அமைச்சர் மெய்யநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், எம்.எல்.ஏ-க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், நகர மன்ற தலைவர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் அழைப்பின் பேரில், விழாவில் பங்கேற்க வந்த மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவி மூவலூர் காமாட்சி மூர்த்தி மேடைக்கு செல்ல முயன்றார். ஆனால் அவர் மேடையில் அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்த அதிகாரிகள் அவரை மேடையில் ஏறவிடாமல் தடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தனக்கேற்பட்ட அவமானமாக கருதிய காமாட்சி மூர்த்தி சிறிது நேரம் விழாவில் கலந்து கொண்டு, விழா முடியும் முன்பே அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

அதன் பின்னர், ராமாமிர்தம் அம்மையார் சிலைக்கு மாலை அணிவிக்க காமாட்சி மூர்த்தியை அமைச்சர் மெய்யநாதன் அழைத்தார். ஆனால் அப்போது அவர் அங்கு இல்லை. அவருக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து அமைச்சருக்கும் தெரியவில்லை.

இது குறித்து காமாட்சி மூர்த்தியின் ஆதரவாளர்கள், “ சமூக சீர்திருத்தவாதி என்று சொல்லப்படும் ராமாமிர்தம் அம்மையார் அவர்களின் சொந்த ஊரான மூவலூரைச் சேர்ந்தவர்தான் காமாட்சி மூர்த்தியும். இவரும் மூவலூர் காமாட்சி மூர்த்தி என்றே அழைக்கப்படுகிறார். மேடையில் நகரத்திற்கு சற்றும் தொடர்பே இல்லாத மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவரை அனுமதிக்கும் போது காமாட்சி மூர்த்தியை அனுமதிக்காததற்கு காரணம் உச்சகட்ட உள்கட்சி கோஷ்டி பூசல்தான். காமாட்சியின் கணவர் ஒன்றிய செயலாளர் மூர்த்திக்கும், மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கும் இடையே நிலவிவரும் உட்கட்சி பூசல் காரணமாகத்தான் காமாட்சி மூர்த்தியை மேடையில் ஏற்றாமல் வேண்டுமென்றே அதிகாரிகள் மூலம் நிவேதா முருகன் அவமானப்படுத்தியிருக்கிறார். பெண் சீர்த்திருத்தவாதியின் சிலை திறப்பு விழாவில் ஒரு பெண் ஒன்றியக்குழுத்தலைவியை அவமானப்படுத்தியதுதான் தி.மு.க-வின் சமூக சீர்திருத்தமோ? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இது ஒட்டுமொத்த தி.மு.க-வினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.” என்றனர் கொதிப்புடன்.

மூர்த்தி மற்றும் காமாட்சி மூர்த்தி
மூர்த்தி மற்றும் காமாட்சி மூர்த்தி

இது குறித்து மயிலாடுதுறை ஒன்றியக்குழுத்தலைவி காமாட்சி மூர்த்தி மற்றும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மூர்த்தியிடம் பேசினோம். “ராமாமிர்தம் அம்மையாரின் சிலையை அவரது சொந்த ஊரான மூவலூரிலேயே திறக்கப்படவேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. ராமாமிர்தம் அம்மையாரின் குடும்பத்தினரும் மூவலூரிலேயே சிலை திறக்கப்படவேண்டும் என்று விரும்பினர். விழாவில் நடந்த சில விஷயங்கள் குறித்து நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை”. என்று முடித்துக்கொண்டனர்.

நிவேதா முருகன்
நிவேதா முருகன்

காமாட்சி மூர்த்திக்கு நடைபெற்ற அவமதிப்பு குறித்து விளக்கம் கேட்க மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான நிவேதா முருகனை தொடர்பு கொண்டபோது நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.

அதிகாரிகள் தரப்பும் இதுகுறித்து நம்மிடம் வாய் திறக்க மறுத்துவிட்டனர்.

-ஆர்.விவேக் ஆனந்தன்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com