தாலிச்செயின் பறிப்பில் ஈடுபட்ட இரு திருடர்களுடன் போலீஸார்
தாலிச்செயின் பறிப்பில் ஈடுபட்ட இரு திருடர்களுடன் போலீஸார்

மயிலாடுதுறை: ’தாலிச் செயின் போச்சே...’: பெண்களை கதற வைத்த 3 பேர் சிக்கியது எப்படி?

திருட்டு நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு

மயிலாடுதுறை நகர பெண்களை அச்சுறுத்தி வந்த தாலிச்செயின் திருடர்களான சிறுவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஜெயகோபியின் மனைவி 36 வயதான இளவரசி. இவர் சீனிவாசபுரம் மெயின்ரோட்டில் உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் உள்ள உதிரிபாகங்கள் விற்பனை பிரிவில் கேசியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி வேலையை முடித்து விட்டு இரவு 7 மணியளவில் தனது கணவர் வருகைக்காக சீனிவாசபுரம் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் இளவரசி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இளவரசி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்ததன் அடிப்படையில் பெண்ணிடம் தாலிச் செயலை பறித்து சென்ற மர்ம நபர்களின் அடையாளம் காணப்பட்டு அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே சேத்தூர் புதுத் தெருவை சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் 18 வயது ஸ்ரீராம், காரைக்கால் கட்லூர் வடக்கு தெருவை சேர்ந்த தெய்வசிகாமணியின் மகன் 20 வயதான பாபிலோன் ராஜ், காரைக்கால், வரிச்சிக்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த தாலி செயினை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஸ்ரீராம், பாபிலோன்ராஜ் ஆகிய 2 பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவனை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். தாலிச்செயின் திருட்டில் இவர்களுடம் மற்றவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? வேறு ஏதேனும் திருட்டில் ஈடுபட்டு இருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருட்டு நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆர்-விவேக் ஆனந்தன்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com