உரங்கள் வழங்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கைக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி அருகே குறுவை தொகுப்புத்திட்டத்தின் கீழ் உரங்கள் வழங்கக்கோரியும், உரங்கள் வழங்குவதற்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்னலக்குடி, நாங்கூர், கீழச்சாலை, மேலச்சாலை, காரைமேடு உள்ளிட்ட கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகள் மேட்டூர் அணை நீரை நம்பி குறுவை சாகுபடி செய்திருந்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவையடுத்து மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் திறக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் கடைமடைப்பகுதிகளை மேட்டூர் அணை தண்ணீர் எட்டிக்கூட பார்க்கவில்லை.
இதற்கிடையே குறுவை சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் உரங்கள் வழங்கப்படும் திட்டமும் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை டி.ஏ.பி, ஒரு மூட்டை யூரியா, 25 கிலோ பொட்டாஷ் ஆகியன இலவசமாக வழங்கப்படும்.
இந்நிலையில் மேற்கண்ட கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகளும் உழவன் செயலி மூலம் மேற்படி திட்டத்தில் பதிவு செய்திருந்தனர். இந்த திட்டம் இன்றுடன் (செவ்வாய்கிழமை) முடிவடைய உள்ள நிலையில் உரங்கள் எதுவும் வழங்கப்படாததால் ஆத்திரமுற்ற விவசாயிகள் நாகை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது குறுவை சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் உரங்கள் வழங்கவேண்டும். மேலும் உரங்கள் வழங்குவதற்கு லஞ்சம் கேட்கும் விவசாய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் குறுவை தொகுப்புத்திட்டத்தில் பயன் பெற்ற பயனாளிகளின் விவரங்களை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்புத்திட்ட்த்தின் கீழ் உரங்கள் கிடைக்கவும், இலவசமாக அரசு வழங்கும் உரங்களுக்கு லஞ்சம் கேட்கும் வேளாண் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் விளக்கிக்கொள்ளப்பட்ட்து.
விவசாயிகள் பயன்பெற அரசு இலவசமாக உரங்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது. ஆனால் வேளாண் அதிகாரிகள் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக உரங்களை வழங்குவதற்கு லஞ்சம் கேட்பது என்பது வெட்கக்கேடான செயலாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
-ஆர்.விவேக் ஆனந்தன்