மயிலாடுதுறையில் பக்தர்கள் புனிதநீராடும் காவிரி துலாகட்டம் பகுதியில் கழிவுநீர் கலப்பதால் பக்தர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
மயிலாடுதுறையில் காவிரி நதியின் நடுவில் உள்ள இடம் துலாக்கட்டம் எனப்படுகிறது. இதனை ரிஷப தீர்த்தம் என்றும் சொல்வார்கள். ஐப்பசி மாதத்தில் இங்கே தீர்த்தவாரி நடைபெறும்போது ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடுவார்கள்.
இந்த இடம் முழுக்குத்துறை என்றும் அழைக்கப்படுகிறது. புண்ணிய நதிகள் தன்னுள் நீராடுபவர்களால் பாவமடைந்துவிட இந்த காவிரியில் நீராடி தங்களுக்குள் உள்ள பாவங்களை போக்கிக்கொண்டதாகவும் தல வரலாறுகள் சொல்கிறது.
அப்படிப்பட்ட புண்ணிய தீர்த்தமான காவிரி துலாக்கட்டம் பகுதி தற்போது சாக்கடைகளால் சீர்கெட்டு கிடக்கிறது. மயிலாடுதுறை பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள காவிரியில் பாதாள சாக்கடை நீர் கலந்து நோய் பரப்பும் பகுதியாக மாறியிருப்பதையும், பல ஆயிரம் பக்தர்கள் புனித நீராடும் காவிரியைக்காண மிகவும் வேதனையாக இருப்பதால் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம், “முக்கியமாக இப்போது துலாக்கட்ட பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக ஆகிவிட்டது. இரவானால் தினமும் மது அருந்துபவர்களால் அந்தப்பகுதி கையகப்படுத்தப்பட்டு விடுகிறது. அங்கே இருந்த ஒரே ஒரு தெரு விளக்கையும் உடைத்துவிட்டார்கள். அந்த இடத்தில் ஒரு ‘ஹைமாஸ்’ விளக்கு அமைத்துத்தரவேண்டி எம்.பி ராமலிங்கத்திடம் பலமுறை கோரிக்கை வைத்துவிட்டேன். நகராட்சிக்கும் புகார் மனு அனுப்பி ஓய்ந்துவிட்டேன். நடவடிக்கை என்பதே இல்லை. காவிரி அருகே உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்து ஒட்டுமொத்த சாக்கடை நீரும் காவிரியில்தான் கலக்கிறது. புனித நீராடும் காவிரி ஆற்றில் இப்போது சாக்கடை நீர் ஓடும் கொடுமையை என்னெவென்று சொல்வது? இந்த பகுதியில் நகராட்சி கழிப்பிடம் ஒன்று கட்டவும் கோரிக்கை விடுத்தோம். வருவோம், போவோர் அனைவரும் காவிரியையை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்
காய்கறிமார்க்கெட் பகுதியிலிருந்து காவிரி துலாகட்ட பகுதிக்கு செல்லும் சாலையும் மிகவும் மோசமாக உள்ளது. இதிலுள்ள மண்டபம் ஒன்று திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானதும்கூட. அவர்களும் இது குறித்து கண்டுகொள்வதே இல்லை. காவிரி கரையோரம் ஆக்கிரமிப்புகளும் அதிகமாகிவிட்டது. கரையோரத்திலேயே வர்த்தக நிறுவனங்கள் கட்டப்பட்டு பகிரங்கமாக செயல்படுகிறது. சிலருக்கு கரையில் பிரமாண்ட கட்டிடம் கட்டியவர்களுக்க்கு பட்டாவே கொடுக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி? என்பது பெரும் மர்மமாக உள்ளது. அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு காவிரியில் சாக்கடை நீர் கலப்பதை தடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.
இது மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜியிடம் கேட்டபோது, “பாதாள சாக்கடை கழிவு நீர் காவிரியில் கலக்கிறது என்பது பொய்யான தகவல்.” என்று கூறியவர், ‘நான் ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன். பின்னர் விரிவாக பேசுகிறேன்.” என்று கூறி நம் செல்போன் இணைப்பை துண்டித்தார்.
-ஆர்.விவேக் ஆனந்தன்