மயிலாடுதுறையில் கடன் கொடுக்க வங்கிகள் மறுப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியரின் காரை மறித்து தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர், திட்டையைச் சேர்ந்த தேவிநடராஜன், மணிக்கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழி தமிழ்வாணன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் தாட்கோ மூலம் தொழில் கடன் கொடுக்க வங்கி நிர்வாகம் மறுப்பதாகவும், 4 ஆண்டுகளாக கடனைப் பெறமுடியாமல் அலைகழிக்கப்படுவதாகவும் ஒரு விளம்பரப் பலகையில் எழுதிக் கொண்டு கலெக்டரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தனர்.
மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்த ஆட்சியர் மகாபாரதி திடீரென அவசர அலுவல் காரணமாக வெளியே புறப்பட்டபோது மனு கொடுக்க வந்தவர்கள் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று விட்டனர். ’கலெக்டரும் எங்களை புறக்கணிக்கிறார்’என்றபடி ஆவேசப்பட்டவர்கள் வேகமாக வெளியே வந்து கலெக்டரின் காரை வழிமறித்து அதன் முன் அமர்ந்து முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காரிலிருந்த ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து அவர்களது குறைகளை கேட்டதோடு, இது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கிறேன்’என உத்திரவாதம் கொடுத்த பின்னரே போராட்டக்காரர்கள் அமைதியாகி ஆட்சியரின் காருக்கு வழிவிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினோம். “நாங்கள் அனைவரும் தாட்கோவில் தாழ்த்தப்பட்டோருக்காக அரசால் மானியத்துடன் கூடிய தொழில் கடனுக்கு மனு கொடுத்துள்ளோம். எங்கள் மனுக்களை விசாரித்த தாட்கோ அதிகாரிகள் கடந்த 2019ம் ஆண்டு கடனை கொடுக்கச் சொல்லி ஒரு வங்கிக்கு பரிந்துரை கடிதம் கொடுத்தனர். ஆனால், அந்த வங்கியோ எங்களுக்கு கடனை கொடுக்க மறுத்து பல வருடங்கள் அலையவிட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாகிய பின்னர் தொடந்து கலெக்டரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
4 ஆண்டுகளாக அலைந்த பலர் மனம் வெறுத்து கடன் பெறுவதற்கான முயற்சியையே கைவிட்டுவிட்டனர். சிலர் மட்டும் இன்னும் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். வழக்கம்போல் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த சமயத்தில் கலெக்டர் வெளியேறியதால்தான் அவரது காரை மறித்து போராடும் சூழல் ஏற்பட்டுவிட்டது. கலெக்டரும் எங்களுக்கு கடன் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் அளித்துள்ளார். கடன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உண்டாகியிருக்கிறது.”என்றனர்.
-ஆர்.விவேக் ஆனந்தன்