மயிலாடுதுறையில் 10 ஊராட்சித் தலைவர்கள் தங்களது வெற்றிச் சான்றிதழை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டம் பட்டியல் சமூக மக்கள் வாழும் பகுதியில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கிராமப்புற சாலைகள், குடிநீர் வசதி, சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, சமூக பாதுகாப்பு, வாழ்வாதாரம் மேம்பாடு போன்ற பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2021-22ம் ஆண்டிற்கு 68 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு சுமார் 13 கோடி ருபாயில் 212 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அரசு அதிகாரிகள் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து 4 ஊராட்சி தலைவர்கள் மட்டும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சீர்காழி அருகே புத்தூர் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இல்லாமல் சாலை மறியலில் ஈடுபட்டு மக்களுக்கு இடையூறு செய்த அவர்களை போலீசார் குண்டுக் கட்டாக தூக்கி வேனில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனை கண்டித்து மேலும் 6 ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்கள் பகுதி மக்களுடன் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் கைது செய்த போலீசார் ஒரு திருமணம் மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்துவிட்டனர்.
ஏற்கனவே காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த 4 ஊராட்சி மன்றத் தலைவர்களில் மூவரை விடுவித்துவிட்டு புளியந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் நேதாஜியை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விதிமுறைகளை மீறி செயல்படும் அதிகாரிகளைக் கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத்தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறக்கோரியும், கொள்ளிடம் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு செயலாளர் கிள்ளிவளவன் தலைமையில் 10 ஊராட்சி மன்றத் தலைவர்கள் தாங்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற சான்றிதழ்களை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தனர்.
அச்சமயம் மாவட்ட ஆட்சியர் இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்து திரும்பினர். அவர்களிடம் பேசினோம். “மத்திய அரசின் இந்த நிதியானது ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்டு ஊராட்சியினால் டெண்டர் விடப்பட்டு பணிகளை செய்யவேண்டும் என்பது அரசின் விதி. ஆனால், அதற்கு புறம்பாக ஆளும்கட்சியினர் கூட்டணி அமைத்து ஒன்றியத்திலேயே ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்பட்டு அவர்களே பணிகளை செய்கின்றனர். அவர்கள் பணிகளை செய்வதால் அதன் தரம் மோசமானதாக இருக்கும். ஊராட்சி மூலம் பணிகளை செய்தால் அது தரம் உள்ளதாக இருக்கும். எங்களுக்கு என்ன தேவையோ அந்த பணிகளுக்கு முதலிடம் கொடுத்து செய்து கொள்வோம். ஆளும் கட்சியினரின் இச்செயலுக்கு அதிகாரிகள் துணை போகின்றனர். இதனை கண்டித்துதான் தொடந்து போராடிவருகிறோம்” என்றனர்.
கலெக்டர் மகாபாரதியை தொடர்பு கொண்டபோது, ‘அவர் சீர்காழி சட்டநாதர் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்யச் சென்றுள்ளார்” என்ற பதில் மட்டுமே கிடைத்தது.
-ஆர்.விவேக் ஆனந்தன்