மயிலாடுதுறை: உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விஷ கதண்டுகள் அழிப்பு

ஊராட்சி நிர்வாகத்திற்கும், கதண்டு வண்டுகளை அழிப்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
கதண்டுகள் அழிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
கதண்டுகள் அழிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

மயிலாடுதுறை அருகே மக்களை அச்சுறுத்தி வந்த உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விஷ கதண்டுகளை தீயணைப்புத்துறையினர் அழித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியம் மடப்புரம் ஊராட்சி பெரிய மடப்புரம் மேலத்தெரு குடியிருப்பு பகுதியில் பனைமரத்தில் பெரிய மண் பானை அளவுக்கு கதண்டு வண்டுகள் கூடு கட்டி இருந்தன.

இதை பார்த்து கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.தென்னை மரம், பனை மரம் போன்ற மரங்களில் வாழும் இந்த விஷ வண்டுகளில் நான்கு வண்டுகள் கடிந்தாலே அவர் உயிர் பிழைப்பது கடினமாகிவிடும். அத்துடன் இந்த வண்டுகளால் கடிபட்டவர்களின் சிறுநீரகம் சில நாட்களுக்குள் செயலிழந்துவிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகையால், இந்த விஷ கதண்டு வண்டுகளை அழிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் மெஹராஜ் செல்வநாயகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

குடியிருப்பு பகுதியில் கூடுகட்டி மக்களை பெரிதும் அச்சுறுத்தி வந்த கதண்டு வண்டுகளை தீயணைப்பு துறை தரங்கம்பாடி வட்ட சிறப்பு நிலை அலுவலர் அருண்மொழி தலைமையில் தீயணைப்பு துறையினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மனோகரன், மதினாபீவி ஷாஜஹான் ஆகியோர்களின் உதவியுடன் கதண்டு வண்டுகளை இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கிய பின்னர் தீயிட்டு அழித்தனர்.

கதண்டு வண்டுகள் அழிக்கப்பட்ட தகவலை அறிந்த மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். அத்துடன் ஊராட்சி நிர்வாகத்திற்கும், கதண்டு வண்டுகளை அழிப்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com