ஊட்டி: சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கி! இன்னொரு சிறுமியை கொலை செய்து... டபுள் போக்சோவில் சிக்கிய ரஜ்னேஷ் குட்டன்
மூடப்பட்ட மர்ம புத்தகமாக இருந்த ஊட்டி சிறுமி கொலை விவகாரம் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதால் மறுபடியும் பரபரப்பு கிளம்பியுள்ளது. அதனுடன் பல ஆதங்க கேள்விகளும் வெடித்துள்ளதுதான் உஷ்ணமே. நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் பைக்காரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை அவரது உறவினரான ரஜ்னேஷ் குட்டன் என்பவர் கடந்த மாதம் 24ம் தேதி காரில் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பின், ‘இதை யாரிடமும் சொல்லாத’ என்று ரஜ்னேஷ் மிரட்டியதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்து சத்தமிட, ஏற்கனவே கஞ்சா போதையில் இருந்த ரஜ்னேஷ் கோபம் தலைக்கேறிய நிலையில் அந்த சிறுமியை காரில் இருந்த பெரிய ஸ்பேனரால் அடித்தே கொன்றுள்ளார்.
பள்ளி சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாத சிறுமியை குடும்பத்தினர் தேடிய நிலையில், கொலை நடந்த புதர் பக்கமிருந்து பதற்றமாக வெளியேறிய ரஜ்னேஷை சந்தேகத்துடன் நிறுத்தி கேள்வி கேட்டனர் உறவினர்கள். ஆனால் அவர் உளறியபடி செல்ல, புதர் பக்கம் சென்று பார்த்தபோது மாணவி காயங்களுடன் இறந்து கிடந்தார்.
தகவலறிந்து வந்த போலீஸ் பிரேதத்தைக் கைப்பற்றினர், தலைமறைவான ரஜ்னேஷ் குட்டனையும் சில மணி நேரங்களில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் பல உண்மை விவரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை, மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்றது ஒரு நபர் தானா அல்லது கூட்டு கிரிமினல்தனமா? போஸ்ட் மார்டம் அறிக்கை வெளிப்படையாக வழங்கப்படவில்லை என்று ஏகப்பட்ட கண்டன கேள்விகள் எழுந்தபடியுள்ளன.
இதற்கு சரியான பதில்கள் வழங்கப்படவில்லை. இதற்கிடையில் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக குற்றவாளி ரஜ்னேஷ் குட்டனை மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்துள்ளது கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ்.
காரணம் ரஜ்னேஷ் குட்டன் 17 வயது சிறுமியைதான் திருமணமே செய்துள்ளாராம். அதுவே குற்றமல்லவா? கொலை வழக்கு தொடர்பாக பல கோணங்களில் விசாரிக்கப்பட்ட நிலையில் தான் இந்த விவகாரமும் வெளியே வந்துள்ளது. அதனால் அவர் மீது புதிய போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது. இந்த நிலையில், இனியாவது மாணவி கொலை வழக்கில் முழு உண்மையையும் போலீஸ் தரப்பு வெளியிட வேண்டும். யாரையாவது காப்பாற்றுவதற்காக சில பெரிய மனிதர்கள் கொடுக்கும் எந்த வித அழுத்தத்திற்கும் பலியாகாமல் உண்மையான உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
செய்யுமா போலீஸ்?
- ஜி.நிலா