கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்குப்பம் அய்யனார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சக்திவேல் (42). கூலித்தொழிலாளி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஞானகுரு, ராஜசேகர் ஆகியோர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் மேஸ்திரி உள்பட 4 பேர் ஏரிக்கு குளிக்க வந்துள்ளனர். ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஞானகுரு, ராஜசேகர் ஆகியோருக்கும் கட்டிட மேஸ்திரி தலைமையில் வந்த 4 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதைப் பார்த்த சக்திவேல் உடனே அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிவிட முற்பட்டார். அப்போது சக்திவேலுக்கும் ஞானகுரு, ராஜசேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஞானகுரு, ராஜசேகர் ஆகியோர் கீழே கிடந்த கட்டையை எடுத்து சக்திவேலை பலமாக தாக்கியுள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் சக்திவேல் மயங்கி கீழே விழுந்தார்.
இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் சக்திவேலை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
மேலும் போலீசார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து சக்திவேலை அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த ஞானகுரு, ராஜசேகரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியில் அய்யனார் கோவில் காப்புக்காட்டில் தலைமறைவாக பதுங்கி இருந்த ஞானகுரு, ராஜசேகரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர், இருவரையும் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.