சேர்ந்து வாழு! இல்லேண்ணா இப்பவே சாவு: வெறித்தனமாக உலாவரும் காதல் சைக்கோக்கள்

மரண போராட்டத்தில் அந்த இளைஞர் காப்பாற்றப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இளைஞரால் கொல்லப்பட்ட சத்யஸ்ரீ
இளைஞரால் கொல்லப்பட்ட சத்யஸ்ரீ

’எனக்கு கிடைக்காத நீ, வேற எவனுக்குமே கிடைக்க கூடாதுடி’ – காதலி மீது கத்தியை பாய்ச்சும் வெறி காதலன்கள் பேசும் டயலாக் இதுதான். இதன் பிறகான நிமிடங்கள் ரத்தமும், சதையுமாகதான் துடித்து அடங்குகின்றன.

காதலை மையப்படுத்திய கொலைகளுக்கு தமிழகத்தில் பஞ்சமே இல்லை. ‘என்னை காதலிச்சு ஏமாத்திட்டா! என்னோட உண்மையான காதலை ஏற்க மறுத்துட்டா! சண்டை போட்டுட்டு ஒரேடியா எஸ்கேப் ஆக பார்க்குறா’ என்று பல வித காரணங்களை சொல்லி இளம் பெண்களை சாகடிக்கும் குரூர சம்பவங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பெருகி நின்றது. சொல்லப்போனால் சென்னை ஸ்வாதி கொலை கிட்டத்தட்ட இதே போன்ற ஒன்றாக துவங்கி வேறு டிராக்கில் பயணமானது.

ஆனால் அதன் பின் பல இளம்பெண்கள் காதல் தோல்வி காரணத்துக்காக கொல்லப்பட்டனர். குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் பல கொலைகள் இப்படி நடந்தன. ஆனால் இந்த சம்பவங்களின் கொலைகார காதலன்கள் சாவது அரிதாகதான் அமைகிறது. கொன்றுவிட்டு எஸ்கேப் ஆகும் நிலையில் பொது மக்களிடம் சிக்கி தர்ம அடிக்கு இலக்காவது, தன்னைத்தானே குத்திக் கொண்டு சாக முயன்று காப்பாற்றப்படுவது என்று ஏதோ ஒரு வகையில் அந்த ஜென்மங்கள் உயிர் பிழைத்துவிடுகின்றன. ஆனால் இப்படியான குரூரங்களால் இளவரசி போல் மகள்களை வளர்க்கும் பெற்றோர்களின் நிலைதான் அந்தோ பரிதாபம்.

இயற்கையின் ஜாலத்தாலோ என்னவோ கடந்த சில காலமாக இப்படியான கொலைகள் அடங்கிக் கிடந்தன. ஆனால் யார் கண் பட்டதோ மீண்டும் புத்துயிர் பெற்று உலாவருகின்றனர் இந்த காதல் சைக்கோக்கள். செப்டம்பர் 1ம் தேதியன்று திருப்பூரில் நடந்திருக்கும் ‘என்ன காதலிக்கலேன்னா சாவு டி’ ஸ்டைல் கொலை உறைய வைக்கிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகள் சத்யஸ்ரீ. 21 வயதான இவர் திருப்பூர் குமார் நகர் 60 அடி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷனிஸ்டாக பணிபுரிந்து வந்தார். கடந்த 1ம் தேதியன்று காலை 10:00 மணி போல் மருத்துவமனைக்கு வந்த ஒரு இளைஞர் இவருடன் பேசிக் கொண்டிருந்தார். திடீரென இருவரிடையிலான பேச்சு காரசாரமான நிலையில் அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்தார். பின் தன் கழுத்தையும் அறுத்துக் கொண்டு விழுந்தார்.

அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இருவரையும் மீட்டு தீவிர சிகிச்சைக்கு அனுப்பினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சத்யஸ்ரீ இறந்தார். ஆனால் மரண போராட்டத்தில் அந்த இளைஞர் காப்பாற்றப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இந்த சம்பவத்தை வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் திருப்பூர் சிட்டி வடக்கு போலீஸார் “சத்யஸ்ரீயை கொலை செய்த இளைஞர் காட்டு மன்னார்குடியை சேர்ந்த நரேந்திரன். தற்போது அவிநாசி அருகே கருவலூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் சில வருட பழக்கம். சோஷியல் மீடியாவில் உருவான நட்பு பின் காதலாகியுள்ளது. சில இடங்களுக்கு இருவரும் சுற்றியுள்ளார்கள் போல, நரேந்திரன் அந்த பொண்ணுக்காக நிறைய செலவும் செய்துள்ளாராம். அவரது கூகுள் பே அக்கவுண்ட் மூலம் இது தெரிய வருகிறது. சமீபத்தில் கருத்து வேறுபாடாகியுள்ளது.

இதன் பின் சத்யஸ்ரீ அவரிடமிருந்து நிரந்தரமாக பிரிய முயன்றுள்ளார்.ஆனால் நரேந்திரனோ பழக்கத்தை தொடர வலியுறுத்தியுள்ளார். ஆனால் சத்யஸ்ரீ பிடிவாதகமாக மறுக்கவே அவரை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்” என்கிறார்கள்.

காலா காலத்துக்கும் கட்டிக்கொண்டு வாழ்வதும், முடியாவிட்டால் வெட்டி சாய்ப்பதுமா காதல்? சூழல் வாய்க்கவில்லை என்றால் விட்டுக்கொடுப்பதும், வாழ்த்தி விழகுவதும்தானே உண்மையான காதல்!

-ஷக்தி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com