திமுக தேர்தல் வாக்குறுதியில் அவர்களுடைய முக்கிய அம்சம் என்று அறிவித்தது தான் இந்த மகளிர் உரிமை தொகை திட்டம். ஆட்சி பொறுப்பிற்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் மாதம் ரூ.1000 பெண்களுக்கு கொடுக்கப்படும் என்று சொன்னதை செய்து காட்டவில்லை என்று எதிர்கட்சிகள் தொடங்கி பொதுமக்களும் விமர்சித்து வந்தனர்.
அதையடுத்து தான் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி மகளிர் உரிமை தொகை திட்டம் எனப்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. தகுதியான மகளிருக்கு இனி மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மாநாடு மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்களை விழாவிற்காக அழைத்து வந்துள்ளனர். காலை 9 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை நிகழ்ச்சி தொடங்கவில்லை. அதன் பின்னர் மதியம் 12.30 மணியளவில் தான் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. அதுவரை வந்திருந்த பெண்கள் பசியோடு அமர்ந்துள்னர். உணவில்லாமல், பட்டினியோடு 3 மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் மதியம் 12.30 மணியளவில் பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழக அரசு தலைமை கொறடா கோவை செழியன் வருகை புரிந்த பின் நிகழ்ச்சி தொடங்கியது. பெண்களை அழைத்து வந்து பட்டினியோடு அமர வைத்து திமுக அரசு மெத்தன போக்கு காட்டுவதாக அங்கு வந்திருந்த சிலர் விமர்சனம் செய்தனர்.