மதுரையில் ஆடல் - பாடல் நிகழ்ச்சியால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதில், வி.சி.க கொடி கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது. மோதலில் அரிவாளால் வெட்டப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமங்கூரில் நேற்று இரவு கோவில் திருவிழா நடைபெற்றது. பின்னர், ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ஆடல், பாடல் நிகழ்ச்சியை ஒரு தரப்பினர் மறைத்து நின்றதால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் நடந்தது.
இந்த நிலையில், ஆடல், பாடல் நிகழ்ச்சி முடிந்தவுடன், ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்கினர். இருதரப்பினரும் மோதிக் கொண்டனர்.
இதில், பட்டியல் இன மக்கள் வசிக்கும் தெருவுக்குள் புகுந்த ஒரு தரப்பினர், அங்கிருந்த இரு சக்கர வாகனம், கார், மற்றும் வீடு உள்ளிட்டவைகளை அடித்து சூறையாடினர்.
இந்த சம்பவத்தில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மணிமுத்து, குமார் உள்ளிட்ட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் மணிமுத்து என்பவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.
மேலும், அந்த பகுதியில் வி.சி.க தலைவர் திருமாவளவனின் படம் அவமதிப்பு செய்யப்பட்டதுடன், வி.சி.க. கொடி கம்பமும் வெட்டி சாய்க்கப்பட்டது. இதனால், அங்கு பதட்டம் நிலவுகிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் குறித்து 24 பேர் மீது 9 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.