மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை பகுதியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடம் தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.
இதை சரி செய்ய கோரியும், புதிய கட்டிடம் கட்டித் தர கோரியும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும், சட்டசபையிலும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் இன்று அலுவலகத்திற்கு வந்தபோது எம்.எல்.ஏ அய்யப்பன் அமரும் இடத்திற்கு மேல் உள்ள மேற்கூரை பெயர்ந்து விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக எம்.எல்.ஏ அய்யப்பன் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து உள்ளதாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏ இல்லாத நேரத்தில் இந்த கட்டடத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை சீரமைக்கவும், புதிய கட்டிடம் கட்டித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்து உள்ளது.