லக்னோ-ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சுற்றுலா ரயில் அதிகாலை மதுரை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்படவே அடுத்தடுத்த பெட்டிகளில் தீ மளமளவென பரவியது.
இதற்கிடையில் கொள்ளையர்கள் யாரும் ஏறிவிடுவார்களோ என்ற அச்சத்தில் ரயில் பெட்டிகளை பயணிகள் பூட்டி வைத்துள்ளனர். இதனால் ரயிலில் தீ பற்றி எரிந்த போது உடனடியாக வெளியேற முடியாமல் பயணிகள் சிக்கி தவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த அனைவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. ரயில் விபத்து குறித்து சம்பவ இடத்தில் அமைச்சர், ரயில்வே அதிகாரிகள், காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் விபத்து குறித்து தகவல்களை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை 9360552608, 8015681915 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசலாம்.
அதையடுத்து ரயிலில் தீ பிடிக்கும் பொருட்களை எதுவும் எடுத்த செல்லக்கூடாது என்று தடையுள்ள நிலையில், பயணிகள் தடையை மீறி சிலிண்டர் எடுத்து சென்றது மட்டுமல்லாமல் சமையல் செய்ய முயற்சித்துள்ளனர். அதிகாலை வேலையில் உணவு சமைத்த போத்து சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.