மதுரையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவின் போது வைகைஆற்றில் கள்ளழகர் இறங்கிய போது அந்நிகழ்ச்சியை காணவந்த பெண் பக்தர்கள் அணிந்திருந்த தாலி செயின் உள்ளிட்ட நகைகள் திருடர்களால் பறிபோன சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம், அல்லி நகரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60). அவர் மதிச்சியம் ஷா தியேட்டர் அருகே நின்றிருந்தார். அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவர் அணிந்திருந்த 5½ பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் திருடிச்சென்றார்.
மதுரை விக்கிரமங்கலம் , கோவில்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (57). இவர் குடும்பத்துடன் சித்திரை திருவிழா காண வந்திருந்தார். திருவிழா கூட்டத்தில் அவர் அணிந்தி ருந்த 3 பவுன் தங்க செயின் பறிபோனது.
மதுரை, மதிச்சியம், சப்பானி கோவில் தெருவை சேர்ந்தவர் மருதவள்ளி (60). இவர் வைகை வடகரை பகுதியில் திருவிழா கூட்டத்தில் நின்றார். அப்போது அவர் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் செயினை சாமி கும்பிடும் ஆர்வத்தில் இருந்தவரிடம் பறித்துச்சென்றனர்.
மதுரை, சின்ன சொக்கிகுளம், ஜவஹர்ரோட்டையை சேர்ந்தவர் மங்கம்மாள் (72). இவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயின் காணமல் போனது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அழவாக்கரைவாடியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (67). இவர் வைகையாற்றில் பக்தர்கள் கூட்டத்தில் நின்றிருந்த போது அவர் அணிந்திருந்த 3¾ பவுன் தங்கச் செயின் பறிபோனது.
ராமநாதபுரம், புத்தேந்தலை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பூபதி (32). இவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்செயினை மர்ம ஆசாமி பறித்துச் சென்றவனை பிடிக்க முடியவில்லை. மதிச்சியம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மது போதையில் சில இளைஞர்கள் சித்திரை திருவிழா கூட்டத்தில் பட்டாக்கத்தியோடு நடனம் ஆடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோக்கள் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் சித்திரை திருவிழா கூட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் பட்டாக்கத்தியோடு ஆட்டம் போட்ட ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த 19 வயதான மணிகண்டன் என்ற இளைஞர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை தேடி வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.