தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தாராளமாக புழங்கும் கஞ்சாவால் இளைஞர்கள், மாணவர்கள் என போதைக்கு அடிமையாகி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. கஞ்சாவை ஒழிக்க தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போலீசாருக்கு அறிவுறுத்தி வருகிறார். தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமையில் போதை பொருட்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை, கீரைத்துறை காவல் நிலைய பகுதியில் கஞ்சா வியாபாரி ஒருவரை காவல்துறையினர் பிடித்து கடந்த இரு தினங்களாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே வேலன் புதுக்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் விற்பனைக்கு தயாராக கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. அதைத் தொடர்ந்து மதுரை போலீசார் தூத்துக்குடி போலீசாரின் உதவியுடன் சாத்தான்குளம் டி.எஸ்.பி அருள் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் நேற்று நள்ளிரவு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் விடிய விடிய அங்கே விசாரணை நடத்தினர். முடிவில் 2000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 7 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-அண்ணாதுரை