மதுரை சித்திரைத் திருவிழாவில் ரவுடிகள் போதையில் பட்டாக்கத்தியுடன் ஆட்டம் போட்டது கள்ளழகரை காண வந்த பக்தர்களை பதற வைத்தது.
மதுரை, சித்திரை திருவிழாவில் அரிவாள், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆட்டம் ஆடிய இளைஞர்கள் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதலாக எதிர்சேவை நடைபெற்ற நிலையில் மதுரை தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் கூடியிருந்தனர்.
மதுரை வைகை வடகரை, ஆழ்வார்புரம், மதிச்சியம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இந்த திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி வழிப்பறி கும்பல் பல்வேறு பகுதிகளிலும் 22 பவுன் நகைகளை, செல்போன் உள்ளிட்டவைகளை வழிப்பறி செய்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரிவாள், கத்தி, வாளுடன் பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இளைஞர்கள் சிலர் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கூட்டத்தோடு சேர்ந்து மதுரை வைகை வடகரை பகுதியில் நடனம் ஆடக்கூடிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை இருந்த பொழுதிலும் இளைஞர்கள் ஆயுதங்களோடு வழிப்பறி செய்ததோடு பொது இடத்தில் ஆயுதங்களோடு ஆடிய சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
போதை இளைஞர்கள் கத்தியை வைத்துக்கொண்டு சித்திரை திருவிழாவுக்கு வந்திருந்த பக்தர்களை அவர்கள் வைத்திருந்த பட்டாக் கத்தியால் பதம் பார்த்ததில் பல பேர் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். போதை மாத்திரை, போதை ஸ்டாம்பு பயன்படுத்திய இளைஞர்கள் போதை தலைக்கேறி தெற்கு வாசால் பகுதியில் இருக்கும் முஸ்லிம் பகுதிக்குள் சென்று கார், பைக் உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்திய சம்பவங்கள் அரங்கேறியதால் அவர்கள் போலீஸ் கமிசனரிடம் புகார் அளித்திருக்கிறார்கள். இச்சம்பவம் கள்ளழகரை காண வந்த பக்தர்களை பதற வைத்தது.