மதுரை மாவட்டத்தில் சுமார் 95 ஆயிரம் பேருக்கு நாய்கடி சிகிச்சை வழங்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வெறிநாய் ஒன்று கடித்துவிட்டால், அதன் மூலம் வரும் நோய்தான் ‘ரேபீஸ்’. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 65 ஆயிரம் பேர் வரை இந்த ரேபீஸ் நோயால் இறக்கின்றனர்.
இந்தியாவில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகின்றனர் என்கிறது புள்ளிவிவரம். ஆனால், இந்த நோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டால், உயிர் பிழைக்காலம் என்பது 100 சதவிகிதம் நிஜம்.
ரேபீஸ் என்ற நோய் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் ஒரு வகை நோய். இது நாய் கடித்தால் மட்டுமே ஏற்படும் என்பது தவறு. குறிப்பாக, பூனை, நரி, கீரி, ஓநாய், வௌவால், நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு போன்றவைகள் கடித்தாலும் ரேபீஸ் வரும்.
இந்தியாவில், முறையாகத் தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதாலே 95 சதவிகிதம் ரேபீஸ் நோய் ஏற்படுகிறது. இதனால் இதனை ‘வெறிநாய்க்கடி நோய்’ என்று சொல்கின்றனர்.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் கடந்த 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றவர்கள் தொடர்பான விவரம் கேட்டு ஆர்.டி.ஐ. மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சுமார் 48,323 பேரும், 2022-ஆம் ஆண்டு 46 ஆயிரத்து 962 பேரும் என மொத்தம் 95 ஆயிரத்து 285 பேர் நாய் கடித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோன்று கடந்த 2021 ஆண்டு ஒருவரும், 2022-ஆம் ஆண்டு 2 மொத்தம் 3 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி பகுதியில் மாதத்திற்கு 200 நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
'நாய் கடியால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதற்காகவே 24 மணி நேரமும் உயர்தர சிகிச்சை அளிப்புதாக' மருத்துவர்கள் தெரிவித்தனர்.