நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் திமுக சார்பில் மதுரையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை. ஆனால் அவரது ஆதரவாளர்கள் மட்டும் பங்கேற்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்தும் தமிழக முழுவதும் உண்ணாவிரத போராட்டம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் என தி.மு.க ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே நீட் தேர்வு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று முடிந்தது.
மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அ.தி.மு.க எழுச்சி மாநாடு நடைபெற்றதால் மதுரை அண்ணாநகர் பகுதியில் இன்று நீட் தேர்வு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தி.மு.க இளைஞரணி, மருத்துவரணி, மாணவரணி சார்பில் நீட் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ கோ.தளபதி, தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் தி.மு.க தொண்டர்கள், மருத்துவர் அணி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் இந்த நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதியம் வரையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை. ஆனாலும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.அமைச்சர் பங்கேற்காதது தி.மு.கவினரிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.