மதுரை அருகே பா.ஜ.க நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் கீரைத்துறை குமார். இவர் மேலமாசிவீதி இன்மையில் நன்மை தருவார் கோயில் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிலர் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை துணைத்தலைவர் குமார் கண்டித்துள்ளார். இதனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆத்திரமடைந்து அந்த பகுதியைச் சேர்ந்த சில தி.மு.க-வினருடன் இணைந்துக் குமாரை சரமாரியாக அடித்து உதைத்துக் காயப்படுத்தியதாகக் கூறப்படுக்கிறது.
இந்த தகவலறிந்த மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலத்தக் காயமடைந்த துணை தலைவர் குமாரை மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக திடீர் நகர் போலீசார், குமார் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், "பாஜக மாவட்ட துணைத்தலைவர் குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தி.மு.க மற்றும் கம்யூனிஸ்டு கட்சி குண்டர்கள் மீது காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தபடும்." என்றார்.
தி.மு.க, கம்யூனிஸ்ட் தரப்பு ஆதரவாளர்கள் கூறும் போது, "நாங்கள் யாரும் குமாரை தாக்கவில்லை. அரசியல் விளம்பரத்துக்காக யாரோ தாக்கியதை எங்கள் மீது பழி போடுவது பா.ஜ.கவுக்கு கைவந்த கலையாகி விட்டது" என்கிறார்கள்.