செந்தில் பாலாஜி குறித்து அவதூறு: ‘சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்’ - சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் கடைகள் மூலம் அதிகமாக பணம் வசூலித்து வருவதாகவும், மின்துறை உள்பட அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து வருவதாகவும் யூடியூபர் சவுக்கு சங்கர் சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சவுக்கு சங்கர் தம்மை பற்றி தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், அவரது கருத்துக்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவக்கும் வகையில் இருப்பதால் அதற்கு தடை விதிக்க கோரியும், தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு மான நஷ்ட ஈடாக 2 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கு சவுக்கு சங்கருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தம்மை பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள நீதிபதி குமரேஷ் பாபு, நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் அவதூறு கருத்து பதிவிட்டதற்காக சவுக்கு சங்கருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்து உள்ளார்.

மேலும், தனது பதிவு குறித்து சவுக்கு சங்கர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்ட நீதிபதி, ‘இனி கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிடும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com