’என்னை காதலிக்கலேண்ணா சாவு, எனக்கு கிடைக்காத நீ வேற எவனுக்கும் கிடைக்க கூடாது’ என்று பிரேக் அப் காதலிகளை கதறக் கதற கொலை செய்யும் குரூர காதலன்களின் லிஸ்டில் இந்த வாரம் நீலகிரி ஜெயசீலன்!
காதலை துண்டித்த, கல்யாணத்துக்கு சம்மதிக்காத காதலியை கெஞ்சிப்பார்த்தும் பலனில்லாத நிலையில் காதலன்கள் கொன்றுவிடும் சம்பவங்கள் தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் அதிகம் நடந்தன. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த அந்த மிருகம் இப்போது மீண்டும் எழுந்துள்ளது.
திருப்பூரில் சத்யஸ்ரீ எனும் இளம்பெண்ணை அவரது காதலன் நரேந்திரன், பட்டப்பகலில் அவரது பணியிடத்தில் வைத்து கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது.
தற்கொலைக்கு முயன்ற அவர் காப்பாற்றப்பட்டார். இந்த பரபரப்பு அடங்கும் முன் விழுப்புரம் அருகே அடுத்த சம்பவம் அரங்கேறியது. காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை வீட்டுக்குள் புகுந்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றார் வெற்றிச்செல்வன். மயங்கி விழுந்தவரை, இறந்துவிட்டார் என்று நினைத்து அவர் நகர, உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்து பிழைக்க வைத்தனர். வெற்றிச் செல்வன் இப்போது கம்பி எண்ணுகிறார்.
இந்த நிலையில் இப்போது அடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே எடக்காடு பாதகண்டி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகள் விசித்ரா. பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த இவரை கடந்த 1ம் தேதியன்று திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியபோது அந்தப் பகுதியிலுள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தார்.
சந்தேக மரணம்! என வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீஸுக்கு பிரேதபரிசோதனை அறிக்கை அது கொலைதான்! எனும் முடிவை கொடுத்தது. கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. விசித்ராவின் போனை ஆராய்ந்து அதன் வழியே ஜெயசீலன் என்பவரை ஸ்கெட்ச் போட்டனர்.
மஞ்சூர் சிவசக்தி நகரை சேர்ந்த ஜெயசீலனை தூக்கி விசாரித்தபோது முதலில் மறுத்தவர் அதன் பிறகான ஃபார்மாலிட்டியில் உண்மையை ஒப்புவித்தார். ‘நான் தான் சார் அவளை கொன்னேன்’ என்று அழுதிருக்கிறார். அதாவது விசித்ராவும், ஜெயசீலனும் பள்ளியில் ஒன்றாக படித்து பிறகு கல்லூரிக்கு ஒன்றாக போய் வந்த வகையில் நட்பு அதன் பின் காதல். ஆனால் ஜெயசீலனின் நடவடிக்கைகள் சமீப காலமாக சரியில்லாத காரணத்தால் விலகியிருக்கிறார் விசித்ரா. படிப்பு முடிந்து விட்ட காரணத்தால் வேறு இடத்தில் மாப்பிள்ளையும் பார்க்க துவங்கியுள்ளனர். இதெல்லாம் ஜெயசீலனுக்கு தெரியவர, உச்ச கோபமாகியுள்ளார். விசித்ராவும் ‘என்னை மறந்துடு’ என்று சொல்லியுள்ளார்.
இதனால் விசித்ராவிடம் ‘கடைசியா ஒரு தடவை உன்கிட்ட பேசணும்’ என்று அழைத்து ஊருக்கு வெளியே ஒரு இடத்துக்கு வர சொல்லியுள்ளார். அங்கே வைத்து அவரிடம் ‘என்னை ஏத்துக்க, கல்யாணம் பண்ணிக்குவோம்’ என்று கேட்டுள்ளார். ஆனால் விசித்ரா பிடிவாதமாக மறுக்க, அங்கே கிடந்த கயிறை எடுத்து அவர் கழுத்தில் இறுக்கி கொன்றிருக்கிறார். பின் அவர் உடலை அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டு எஸ்கேப் ஆனதை விளக்கியிருக்கிறார்.
பிரேக் அப் ஆகும் பசங்களின் இந்த சைக்கோத்தனமான போக்கானது இளம் பெண்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி வருகிறது!
-ஷக்தி