தூத்துக்குடி அருகில் இருக்கும் சங்கரப்பேரியில் லாரி புக்கிங் ஆபீஸ் நடத்தி வந்தவர் சக்திவேல் (53). இவர் நேற்று மாலை லாரி புக்கிங் அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்திருந்தார். அவருக்கு பாதுகாப்பாக 10-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் திடீரென்று கையோடு கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை சக்திவேல் மீது வீசினர். நாட்டுக் குண்டு வெடித்து சிதறியதை கண்ட அனைவரும் உயிர் பிழைப்பதற்காக தலைதெறிக்க ஓடி விட்டனர். செய்வதறியாது நின்ற சக்திவேலை சூழ்ந்து கொண்ட அந்த கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்தது, ரத்த வெள்ளத்தில் கிடந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், நகர டிஎஸ்பி சத்யராஜ், ஊரக ஏடிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழிக்கு பழி சம்பவத்தினால், சக்திவேல் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சங்கரப்பேரியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி 10-க்கும் மேற்பட் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் சக்திவேலுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கருப்பசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேல் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் தான் அவர் கருப்பசாமியின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சிப்காட் போலீஸார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். அதை தொடர்ந்து போலீஸாரிடம் பேசினோம், "கருப்பசாமி கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் சக்திவேல். எனவே அவரை பழி வாங்க வேண்டும் என்று கருப்பசாமி ஆதரவாளர்கள் காத்துக் கொண்டிருந்தனர். விஷயத்தை தெரிந்து கொண்ட நாங்கள், நீங்கள் இந்த ஊர் பக்கம் வர வேண்டாம் என்று சக்திவேலை எச்சரித்தோம். இரண்டு மாத காலம் ஊருக்கு வராமல் இருந்த அவர் எங்கள் எச்சரிக்கை மீறி ஊருக்கு வந்துவிட்டார். அதை தெரிந்து கொண்ட கருப்பசாமியின் ஆதரவாளர்கள் சக்திவேலை தீர்த்து கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். நேற்று மாலை சக்திவேல் இருக்கும் இடம் தெரிந்து கொண்ட அந்த கும்பல் அவரை தேடி வந்து கொலை செய்து விட்டது" என்றனர்.
தூத்துக்குடி சங்கரபேரி பகுதியில் அடுத்தடுத்து பழிவாங்கும் சம்பவம் நடப்பதால் போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் சக்திவேலின் உறவினர்கள் பழிக்கு பழி வாங்காமல் விடமாட்டோம் என்று சபதம் ஏற்று இருப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.