செங்கல்பட்டு: டாஸ்மாக் கடைக்கு 7 அடி நீள பாம்புடன் வந்த ஆசாமி - மதுபிரியர்கள் அலறியடித்து ஓட்டம்

டாஸ்மாக் கடைக்கு 7 அடி நீள பாம்புடன் வந்த ஆசாமியை கண்டு மதுபிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த நிகழ்வு சிறிது நேரத்துக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
பாம்புடன் வந்த சங்கர்
பாம்புடன் வந்த சங்கர்

செங்கல்பட்டு, பழைய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு இன்று மாலை ஒருவர் தோளில் துண்டு போட்டுக் கொண்டு வருவதுபோல சுமார் 7 அடி உயரம் கொண்ட சாரை பாம்பை தோளில் போட்டுக்கொண்டு நண்பர் ஒருவருடன் மது வாங்க இருசக்கர வாகனத்தில் வந்தார்.

அப்போது அங்கு மது வாங்க காத்திருந்தவர்கள் அலறியடித்தபடி அவருக்கு வழிவிட்டு ஓடினார்கள். பின்னர் அந்த பாம்பை கையில் வைத்துக் கொண்டு வேடிக்கை காட்டியதால் சாலையில் சென்ற வாகன ஒட்டிகள் ஆச்சரியமாக பார்த்தனர்.

பின்னர் அந்த பாம்பை அவர் அணிந்திருந்த லுங்கியில் போட்டு மடித்துக் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றார். அவரை நாம் பின்தொடர்ந்து சென்றபோது பாம்பை புலிப்பாக்கம் அருகே கொள்வாய் ஏரி அருகேயுள்ள முட்புதரில் விட்டுவிட்டார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர், செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூரை சேர்ந்த சங்கர் என்றும் அவர் வரும் வழியில் பாம்பு குறுக்கே ஓடியதால் அவை வாகனங்களில் சிக்கி உயிரிழக்கக்கூடாது என நல்லெண்ணத்தில் பிடித்து வந்து சிறிதுநேரம் விளையாடிவிட்டு புதரில் விட்டுவிட்டதாகவும் கூறினார்.

இச்சம்பவத்தால் மதுபானக் கடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சில் இருக்கை பிடிக்க பாம்பை உள்ளே போடும் வடிவேலு பட நகைச்சுவை காட்சியை மிஞ்சும் அளவிற்கு உயிருடன் இருந்த 7 அடி நீள பாம்புடன் செங்கல்பட்டு பகுதியில் உள்ள மதுபான கடைக்கு வந்த ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

- டில்லிபாபு, செங்கல்பட்டு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com