தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்: விழுப்புரத்தில் 7 பேர் உயிரிழப்பு - அதிகாரிகள் பணியிடை நீக்கம்

இன்று காலை சிகிச்சையில் இருந்த விஜயன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்ததுள்ளது.
தொடரும் கள்ளச்சாராய மரணங்கள்: விழுப்புரத்தில் 7 பேர் உயிரிழப்பு - அதிகாரிகள் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தனர். மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் எக்கியார் குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம், திண்டிவனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ மூர்த்தி (55) மலர்விழி, மன்னாங்கட்டி ஆகிய 3 பேரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை சிகிச்சையில் இருந்த விஜயன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்ததுள்ளது. இந்நிலையில் போலீசாரின் அலட்சிய போக்கும் இதற்கு காரணம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர்கள் தீபன்,சீனுவாசன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா, உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தீவிர மதுவிலக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதே போன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் அருந்தியதால் 4 பேர் பலியான நிலையில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com