மயிலாடுதுறை அருகே மோசமான இணைப்புச் சாலைகள்- மக்கள் தவிப்பு

யானை வாங்கப்பட்ட பிறகு அங்குசம் வாங்க வழி இல்லாதது போல பல கோடி ரூபாயில் பாலம் கட்டியும் இணைப்புச்சாலை இல்லாத நிலை உள்ளது.
மோசமான நிலையில் உள்ள இணைப்பு சாலை
மோசமான நிலையில் உள்ள இணைப்பு சாலை

மயிலாடுதுறை  அருகே காவிரி ஆற்றின் குறுக்கே தரமான பாலம் கட்டப்பட்டும் மோசமான இணைப்புச்சாலையால்  தவித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறையை அடுத்த மூவலூர்-சோழம்பேட்டை இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்று  மக்கள் பயன்படுத்தி வருகின்ற நிலையில் அதன் இரு புறமும் உள்ள மூவலூர் மற்றும்  சோழம்பேட்டை இணைப்பு சாலைகள்  மேடு பள்ளமாக மிகவும் மோசமான நிலையில்  இருப்பதால் எப்பொழுது மேம்படுத்தப்படும் என்னும் கேள்வி அவ்ழியாகச் செல்லும் பல்வேறு கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம்
சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம்

இது குறித்து சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம், “பல ஆண்டுகளாக இச்சாலையை பயன்படுத்த முடியாமல் பாலம் கட்டப்பட்டு வருகின்ற காரணத்தினால் வெவ்வேறு வழிகளை சுற்றி மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்திற்கும் குத்தாலத்திற்கும் சென்று வந்த மக்கள் தற்பொழுது காவிரியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்ட பிறகும் கூட தாங்கள் நிம்மதியாக செல்ல முடியவில்லை.  

யானை வாங்கப்பட்ட பிறகு அங்குசம் வாங்க வழி இல்லாதது போல  பல கோடி ரூபாயில் பாலம் கட்டியும் இணைப்புச்சாலை இல்லாத நிலை உள்ளது. இவ்வழிய தான் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம் வழியாக கும்பகோணத்திற்கும், மாப்படுகை வழியாக கும்பகோணத்திற்கும் செல்லக்கூடிய பிரதான இரு சாலைகளையும் இது இணைக்கின்றது என்பதால் இதன் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது.

ஆகவே, பாலம் பணி சிறப்பாக நிறைவுற்று பயன்பாட்டிற்கு வந்த பிறகு  குறைந்த அளவு தூரமே உள்ள குறிப்பாக மூவலூர் சாலை சுமார் 150 மீட்டர், சோழம்பேட்டை சாலை சுமார்  200 மீட்டர் அளவிலேயே உள்ள காரணத்தினால் உடனடியாக இச்சாலையை மேம்படுத்திக் கொடுத்தால் மக்கள் மன மகிழ்ச்சியோடு இப்பாலத்தைக் கடக்க பேருதவியாக இருக்கும் என்பது உறுதி.

ஆகவே பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ,மாணவிகளின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக இப்பாலத்தை இணைக்கின்ற இரு சாலைகளையும் மேம்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில்  கோரிக்கை விடுத்துள்ளோம்.” என்றார்.

இது குறித்து மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, “இணைப்புச்சாலைக்காக நிதி இன்னும் வரவில்லை. விரைவில் நிதி வந்துவிடும். வந்தவுடன் அங்கு தரமான சாலை போடப்படும். என்றனர்.

ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com