மனைவியின் பிறந்தநாளுக்கு பரிசளிப்பதற்காக சகப் பெண் ஊழியரை கொலை செய்து, நகைகளை கொள்ளை அடித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்த அஜீத்குமார், தன் மனைவி மகாலட்சுமியின் பிறந்தநாள் பரிசாக தங்க மோதிரம் வாங்க, உடன் பணியாற்றிய வேல்விழி என்பவரிடம் பணமாகவோ? அடமானம் வைக்க நகையாகவோ? தருமாறு கேட்டுள்ளார். இதற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த அஜீத்குமார், வேல்விழியை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்ததுடன், அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துள்ளார்.
பின்னர், வேல்விழியின் உடலை வெள்ளை சாக்குப்பையில் அடைத்து கோயம்பேடு தீயணைப்பு நிலையம் அருகே வீசிச் சென்றுள்ளார்.
இதற்கிடையில் மகளை காணவில்லை என திருக்கோவிலூரில் இருந்து வந்த வேல்விழியின் தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரில், சூளைமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், கொலை செய்ததை அஜீத்குமார் ஒப்புக்கொண்டார்.
கடந்த 2018ல் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை சென்ட்ரல் அருகே உள்ள அல்லிக்குளம் வணிக வளாகத்தில் செயல்படும் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கை நீதிபதி T.H.முகமது பாரூக் விசாரித்தபோது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் B.ஆரத்தி ஆஜராகி வாதிட்டார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அஜீத்குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அபராதத் தொகையில் 14 ஆயிரம் ரூபாயை வேல்விழியின் பெற்றோருக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.